Saturday 5 December 2009

அகம் காமாஸ்மி

எதிரே இரயிலிறங்கி வந்த சிலரை இடித்து தள்ளி….முட்டி மோதியபடி உயிரைக்கொடுத்து ஓடி….,எட்டி கை நீட்டி…,பிளாட்பாரம் முடிவதற்குள் கடைசிப்பெட்டியின் கடைசி படிக்கட்டில்.... கடைசி கைப்பிடியையாவது பற்றி விட்டால் போதும், தொற்றி தொங்கி…,பிறகு உள்ளே ஏறி விடலாம் என்று எடுத்த என் அத்தனை பிரயத்தனத்தையும் தோற்கடித்து பிளாட்பாரத்தின் கடைசி சரிவையும் கடந்து நிலையத்தைவிட்டு வெளியேறியது, அந்த இரவு நேரத்தின், அந்த கடைசி இரயில்.

எந்த ஸ்டேசன் ,எந்த இரயில், என்றிரவு என்பதெல்லாம் இந்த கதைக்கு அநாவசியம். அனுபவம் மட்டும்தான் பிரதானம் என்பதால்…குறுக்கே
யோசிக்காமல் படியுங்கள்.

நெஞ்சு எரிய, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க…,அயர்ச்சியுடன் கால் முட்டிகளில் இரண்டு கைகளையும் ஊன்றி….குனிந்து …. ஆசுவாசப்படுத்திக்கொண்டு…இனி இரவு, இந்த பிளாட்பாரத்திலேயே படுத்துத்தூங்கிவிட்டு காலையில் முதல் வண்டிக்குதான் போகமுடியும் என்று யோசித்தபோது….அப்பாவின்மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

இனி இந்த கடன்காரர்களிடம் வட்டிவசூலிக்கற வேலைக்கெல்லாம், அப்பாவே அனுப்ச்சாலும்….நான் வரக்கூடாது என்று கங்கனங்கட்டிக்கொண்டு நிலையத்தின் வெய்டிங் ஹால் நோக்கி நடந்தேன்.

இரவு பதினொரு மணி ஆகி விட்டிருந்ததால் ரயில்வே ஸ்டேஷனில் கேண்டீன் கூட அடைத்துவிட்டிருந்தார்கள். பசி வேறு உயிரை எடுத்தது.

பாழாப்போன அந்த கடன்காரப்பய பொண்டாட்டி காசு இல்லைன்னா இல்லைன்னு சொல்லி அனுப்பாம சாயந்தரம் ஆறுமணியிலிருந்து…..

‘….இதோ வந்திருவாரு…இருப்பா…! ..வந்தது வந்த..,பாத்து வாங்கிட்டுபோயிரு…அப்பறம் அப்பா …எங்கள கோவிச்சுக்குவாரு…! வர்ர நேரந்தான்…என்னமோ…இன்னைக்கு இவ்ளோ லேட்டு… சொல்லிகிட்டேதான் இருந்தாரு…! ஆனா இந்த தடவதான் இப்படி மூனு மாசம், மொத்தமா வட்டிபணம் நின்னுப்போச்சு…! அப்பாகிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு….!அடுத்த மாசம் மொத்தமா அசல திருப்பிர்றோம்…….இதோ….அவரே…வந்துட்டாரு…. அட…அவரில்லையா… இருட்ல ஜாட அவரு மாதிரியே இருக்கவே ஏமாந்துட்டேன்.

ஆமா நீயும் ஃபர்ஸ்ட் இயர்தான படிக்கறே…? எங்கப்பொண்ணுகூட பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி ஃபர்ஸ்ட் இயர்தான்.,…..அடியே…! உள்ள என்னடி பண்றெ….! ஹி…ஹி…அவ கொஞ்சம் கூச்ச சுபாவம். அப்படியே என்னமாதிரியே வந்து வாய்ச்சிருக்கா..!

அய்யோ…என்னவோ இன்னைக்குன்னு பாத்து இவருக்கு இவ்ளோ லேட் ஆகுதே…!...நீ வேண்னா கொஞ்சம் சாப்பட்றீயா..?...சங்கோஜப்படாத. இதுவும் உங்க வீடு மாதிரிதான்….பசிக்கிமேப்பா…சரி இரு வேன்னா இன்னொரு காஃபி போட்றேன்….ஏண்டீ….இவளே…தம்பிக்கு கொஞ்சம் காஃபியாவது கலந்துட்டுவாடீ..!…தட்ல…பிஸ்கட்டெல்லாம் அப்படியே வச்சது வச்சமாதிரியே இருக்கே…எடுத்துக்கப்பா…சாப்பிடு…! இந்த பாழாப்போன மனுஷன் இன்னும் என்னப்பண்ணுதோ..,உங்கப்பான்னா எங்களுக்கு ரொம்ப மரியாதை. பயமும்கூட. கோச்சுக்கபோறார்….கொஞ்சம் எடுத்து சொல்லுப்பா..! நேரமாயிட்டே இருக்கு…! ஆனா கடைசி வண்டி பதினொரு மனிக்குதான்…இதோ எட்டு வச்சா இரயில்வே ஸ்டேஷன்.!...நீதான் ,சாப்பிடமாட்டேன்னு அடம் புடிக்கறே…அதான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு…..!அடியேய்…என்னடீ…பண்றே…காஃபி கலந்தாச்சா இல்லையா..?..ஹ்.ஹி…ஹி…பிறத்தியார் முன்னாடி வர்றதுனா…ரொம்ப வெக்கப்படுவா…! இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணப்பெத்து வச்சுருக்கோம்!...., பரவால…சப்பியே குடிப்பா….! உங்ககிட்ட ஆச்சாரமெல்லாம் கிடையாது…எங்களுக்கு…! அடடே… இதோ அவரே வந்துட்டாரே……… ’ - ன்னு, அறுத்து தள்ள,

கடைசியில் அந்தாளு வந்து … - ‘மன்னிச்சுக்கோப்பா…அப்பாகிட்டே சொல்லு…அடுத்த மாசம் வட்டியும் மொதலுமா மொத்தமா செட்டில் பண்ணிர்ரேன்….’- அப்படின்னு சொல்லும்போது மணி பத்தே முக்காலாகிவிட்டிருந்தது. அடிச்சி புடிச்சு,…ரயில்வே ஸ்டேசன் வந்தப்போதுதான் அந்த கடைசி வண்டியும் காலை வாறிவிட்டது.

அந்த வெட்கம் மிகுந்த பி.எஸ்.ஸி ஃபஸ்ட் இயர் ஒரு முறையாவது எதிரே வந்துவிட மாட்டாளா….என்று இந்த வெட்கங்கெட்டவன் …..அந்த அம்மாவின் அறுவையையெல்லாம் தாங்கிக்கொண்டு …..சபலத்துடன் உட்கார்ந்திருந்ததின் பலன்…..இப்போது இந்த ஆளில்லாத இரயில்வே ஸ்டேசனில்…..- அனுபவித்தே தீர வேண்டும்.

வெயிட்டிங் ஹாலுக்கு வந்து பசியுடனே படுத்து எப்போது தூங்கிப்போனேன்னே தெரியல.
(இனிமேல்தான் கதை ஆரம்பிக்குது கவனமா படியுங்க.)
எவ்வளவு நேரம் போச்சுன்னு தெரியல. திடீர்னு எதோ அரவம் கேட்டு முழிப்பு தட்டுனப்போ வெயிட்டிங் ஹாலின் விளக்குகளெல்லாம் அனைக்கப்பட்டு, மெல்லிய இருட்டில் ‘சில்-அவுட்டில்’ ஏதோ ஒரு குடும்பம் மூட்டை முடிச்சுகளுடன் உள்ளே நுழைந்து இருட்டில் தட்டுத்தடுமாறி படுத்துக்கொள்ள இடம் தேடி நகர்ந்துக்கொண்டிருந்தது. அப்போது அனேகமாக மூன்றாம் ஜாமமாக இருக்கலாம்.
அவர்களும் வண்டி கிடைக்காமல் காலையில் முதல்வண்டிக்கு போகவேண்டியவர்களாக இருக்கலாம்.
வந்தவர்களில் அனேகமாக இரண்டு மூன்றுபேராவது பெண்களாய் இருப்பார்கள் என என் மூளை உத்தேசித்தபோதே பாலுணர்வுக்கான எனதுவசம் இருந்த அத்தனை சுரப்பிகளும் அந்த அர்த்த ஜாமத்தில் விழித்துக்கொண்டு கன்னாபினாவென வேலை செய்ய ஆரம்பிக்க....
நான், ... இப்படி நடந்தால் எப்படியிருக்கும்...! என்று கர்ப்பனை செய்துகொண்டிருக்கும்போதே....அது நடக்கவும் ஆரம்பித்தது.
அந்த கூட்டத்திலிருந்த, நான் எதிர்பார்த்த, அல்லது தேர்வு செய்த அந்த தாவணிப்பெண் கடைசியில் கையாலும், காலாலும் துழாவி துழாவி இருட்டில்..., என் முற்பிறவி கர்மவினைப்பயனாலும் என் பிதுருக்களின் பூர்வ புண்ய வினைபயன்களாலும்...என் சித்தம் சிறப்புற என் அருகிலேயே சயனம் கொள்ளும் சித்தமாய்,... எனதருகிலிருந்த அந்த ‘புன்னிய’ காலி இடத்தை அவள் தெரிவுசெய்யும்பொருட்டு விதியானது எனக்கு சகாயம் செய்தது.
எனது 20 வயதை கருத்தில் கொண்டு... கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க..
வெளியே பிளாட்பாரத்தில் ட்ராலி தள்ளும் சத்தம்.... இரண்டு, மூன்று பிளாட்பார்ம் தள்ளி ஏதோ ஒன்றில் வந்து நின்ற வண்டியில் ‘டீ..காபி’ –என கூவும் குரல்கள், இத்யாதி...இத்யாதி என.. ஒரு பின்னிரவுநேர இரயில்வே ஸ்டேஷன் இரைச்சல்களையெல்லாம் தாண்டி...எனது லப்-டப் ஓசை....ஸ்பஸ்டமாய் எனக்கே கேட்க... உடம்பெல்லாம்-(குறித்துக்கொள்ளுங்கள் ‘உடம்பெல்லாம்’) ஒரு விறைப்புத்தன்மைக்கு வந்து விட... அசையாமல் ஒரு மரக்கட்டையாய் கிடந்தேன். கொஞ்சநேரத்திற்குப்பிறகுதான் ஐம்புலன்களில் ஒவ்வொன்றாய் மெல்ல மெல்ல மீண்டும் விழித்துக்கொள்ள ஆரம்பித்தது.
முதல் உணர்வு நாசிக்குத்தான் எட்டியது. தலைநிறைய கதம்பமாய் ‘பூ’ வைத்திருப்பாள் போலிருக்கிறது. இது அதுவென யூகிக்க முடியாத அளவிற்கு ஏதோ ஒரு வாசனை. அது அவள் தலையிலிருந்த ‘பூ’வா..?பவுடரா..?-திரவியமா..?....அல்லது...வேர்வையுமா? மஞ்சள்...ஷாம்பூ...அரப்பு...சீயக்காய்...என அத்தனையும் சேர்ந்த கலவைகளோ....அல்லது...இவையெல்லாம் சேர்ந்து ஒரே தலைப்பில் ‘”’’’’’”பெண் வாசனை’ என்று சொல்லிவிடலாமா....?
நான் இப்படி சகல புலன்களாலும் பாதிக்கப்பட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்க...அவளோ....இடம்தேடி படுத்துத் தூங்கியும் விட்டிருந்தாள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்ததுதான். ஆனால் என்னைப்பொறுத்தவரை பிரபஞ்ச இயக்கம் மொத்தமும் உறைந்து...எனது உயிர் இயக்கம் மட்டுமே எஞ்சியிருப்பதாய் பட்டது...
இப்போது அவள் புரண்டு படுக்கும்...அசைவு உணரமுடிந்தது...ஒருக்களித்து எனது பக்கமாய் திரும்பியிருப்பாள் போலிருக்கிறது. அருகில்...வெகுஅருகில்...இல்லை..என்மீது...ஏதோ...மயிலிறகு ஸ்பரிசம் போல்...தொட்டுக்கொண்டு...அல்லது....இல்லையோ...தெரியவில்லை. ஆனால் நான் ஒரு மைக்ரோ...மில்லிமீட்டர் அளவில் அசைந்தாலும் அவள் முகம்...மூக்கு..இதழ்கள்..பட்டுவிட வாய்ப்பிருக்கிறது...எனது காதோரத்தில் அவளது மூச்சுக்காற்று...உணரமுடிகிறது...இளம் வெதுவெதுப்பில்..சீரான இடைவெளியில்...ஒரு பெண்ணை அனுபவித்துவிடுவது என்றால் என்ன என்பதுபற்றியெல்லாம் எனக்கு அந்த வயதில் எதுவும் தெரியாது. ஆனால் அந்த வினாடிகளில் அவளை அனுபவித்துவிட்டேன் என்றுதான் தோனியது.
எனது டெஸ்ட்ரோஜன் சுரப்பிகளில் சூடு கிளம்பி - அதை விளக்கும் மொழிதிறனெல்லாம் இப்போதும் எனக்கு கைகூடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
எனது காதுமடல்கள் சூடேறியிருந்தது. இந்த பிரபஞ்ச சூட்சுமத்தின் ஆதி ஒலி ‘ஓங்’காரம் என்றெல்லாம் சொல்வார்களே அப்படி எனக்கு அந்த கணம்...பிரபஞ்ச உறைதலுக்கிடையே திருவிளையாடலில் சிவபெருமான் பாடுவதை நிறுத்தி இயக்கமில்லாமல் இருக்கும்பொழுது....பிரபஞ்சம் முழுதும் அசைவற்று இருக்குமே அதுபோல்..அனைத்தும் ஒடுங்கி...என் இதயத்தின் லப்-டப் மட்டும்...'ஓ' ங்காரமாய்......
எவ்வளவு நேரம் அப்படியே இருப்பது...! திடீரென மீண்டும் ஒரு புரளலில் அவளது கால்களை தூக்கி என்மீது... (என் மீது என்றால் என் தொடைகள் மீது). கைகள் என் மார்மீது...என்று அமைய, நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகும் நிலை. எனது தொடைகளிரண்டும் என் கட்டுப்பாட்டை மீறி.....தடதடவென லேசாக உதறுவதை உணரமுடிந்தது.
எனது தோள்களில் ஏதோ மென்மையாய் பஞ்சுப்பொதியாய்...அது அநேகமாய் அவளது தணங்களாயிருக்குமோ....?.மெல்ல ஒரு அசைவில் அதன்மீது ஒரு அழுத்தம் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்ள தோணியதே ஒழிய தைரியம் வரவில்லை. சொல்லப்போனால் உடல் முழுக்க மறத்துப்போய் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.
சரியான நாகரிக வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால்....இந்த உணர்வுக்கொந்தளிப்பில் மொத்த ‘நானும்’ என்னிலிருந்து வெளியேறிவிடுவேனோ...என்கிற உச்ச...நிலை...!.(புரியும் என்று நம்புகிறேன்)
ஒரு சில நிமிடங்கள்தான்...என்ன அசௌகரியத்தை உணர்ந்தாளோ...சட்டென எண்ணிலிருந்து... புரண்டு..... விலகிக்கொண்டாள்...இருட்டில்.. ‘சட்’டென..... ‘பிளக்’ பிடுங்கினதுபோல்...ஒரு வெறுமை...
ஆனால் என்னால் இதை தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
அவளது அருகாமையின்போது இருந்த படபடப்பு குறைந்து ஆசுவாசப்படுவதற்குப்பதில் இதயம் இப்போது முன்னைவிட அதிக அங்கலாய்ப்புடன் அதற்காக ஏங்க ஆரம்பித்தது. தறிகெட்டுப்போய் தத்தளிக்க ஆரம்பித்தது.
ஏதாவதான ஒரு அற்புதம் நிகழ்ந்து மீண்டும் அந்த பொற்கணங்கள் வாய்த்துவிடாதா..என்று காத்திருந்த மனது, ஒரு நிலையில் சலிப்புற்று, இனி காத்திருப்பதில் பயனில்லை என்று துணிந்து, மெல்ல கைகளை பக்கவாட்டில் நகர்த்தி துளாவி பார்த்ததில் அவள் எட்டாக்கனி ஆகிவிட்டிருந்தது புரிந்தது. ஏக்கம் இப்போது ஏமாற்றமாகி,..கொஞ்ச நேரத்தில் எரிச்சலாக மாற ஆரம்பித்தது. ஏதாவது செய்தாவது மீண்டும் அந்த அனுபவத்தை அடையவேண்டி மணம் அலைபாய..., தூக்கத்திலான ஏதோ அசவுக்கரியம்போன்ற பாவனையில் ஒரு படிநிலை புரண்டுப்படுப்பதான தோரனையில் நகர்ந்து மீண்டும் கைகளால் துளாவிப்பார்த்ததில் அவள் இடுப்பில் போய் என் கைகள் விழ, ஆஹா...என மனம் குதூகலம் அடையுமுன்பே சட்டென தன் கைகளால் இடுப்பில் விழுந்த எனது கைகளை சட்டென தட்டிவிட்டவள் இன்னும் கொஞ்சம் தள்ளி படுத்துக்கொள்ள, மனம் துணுக்குற்றது.
இதற்குமேல் அடுத்தகட்டத்திற்கு நகர அச்சமுற்று...தயக்கத்துடன் மீண்டும் பழைய நிலைக்கே நகர்ந்து படுத்துக்கொள்ள நேர்ந்தது.
இருந்தாலும் அந்த சுகானுபவத்திலிருந்து மீள மனமின்றி ...சில நிமிடங்கள் பின்னோக்கி பயணித்து அவள் புரண்டு படுத்து தன் கைகளையும் கால்களையும் என் மீது போட்டிருந்த அந்த நிமிடங்களை தேர்வு செய்து அதிலேயே கொஞ்ச நேரம் திளைத்திருந்தேன்
காரண காரியமில்லாமல் நான் முதன்முதலில், எட்டாங்கிளாஸ் படிக்கும்போது காதலித்த என் முதல் காதலியின் முகமெல்லாம் நினைவில் வந்து போனது. அவளை,...அல்லது சற்று நேரத்திற்கு முன் அந்த மாமி வீட்டில் பார்த்த...(இல்லை...கடைசிவரை பார்க்காத) பெண்ணை, அல்லது என்றோ ஒருநாள் நான் கட்டிக்கொள்ளப்போகும் முகம் தெரியத யாரோ.....ஒரு பெண்ணை....இதில் யாரை...வரிந்துகொள்வது என்றெல்லாம் குழம்பிப்போய்...பக்கத்தில் படுத்திருப்பவளை இவர்களில் ஒருத்தியாய் வரிசைகிரமமாய் கற்பனை செய்து......

கடைசியில் எப்போது தூங்கிப்போனேனோ தெரியவில்லை.

(இதற்குமேல் மன தைரியமிக்கவர்கள் தொடர்ந்து படிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை)
எவ்வளவு நேரம் தூங்கிவிட்டிருந்தேன் என்று தெரியவில்லை.
திடீரென ஏதோ அரவம் கேட்டு திடுக்கிட்டு முழிப்பு தட்டிக்கொள்ள....விழித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பரபரப்புடன் கவனிக்க பொழுது புலர்ந்து போயிருந்தது.
விழித்துக்கொண்டு சூழல் உணர்ந்த மறுவினாடி பக்கத்தில் படுத்திருந்தவளின் நினைவு முதலில் வர...திரும்பி, பக்கத்தில் பார்க்கிறேன். அவளுடன் நேற்றிரவு வந்தவர்கள் அதற்குள் எழுந்து கிளம்ப தயாராகிக்கொண்டிருக்க....
அதில் ஒருவர்,....தலை நிறைய பூச்சரங்களுடன் எனக்கு முதுகு காட்டி தூங்கிக்கொண்டிருக்கும் என் உள்ளங்கவர் 'கள்ளி'-யிடம் நெருங்கி காலால் எத்தி ‘யேய்...நாயே...! எழுந்திரி‘டா’...டேய்...ராகவா...அடச்சீ...எழுந்திரி...ட்ரெயினுக்கு..டைம்...ஆச்சுடா...’- என்றவாறு தொடர்ந்து என்னவளின் பிட்டத்தில் உதைத்தபடி திட்டிக்கொண்டிருக்க,
முனகிக்கொண்டே சலிப்புடன் எழுந்து உட்கார்ந்தவ( ), கரகரப்பான ஆண் குரலில் ‘என்னடா...வண்டி வந்துருச்சா..?’-என்ரபடி கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க,
‘அடச்சீ...எழுந்து மொதல்ல ட்ரஸ்ஸ கழட்டிட்டு வேட்டிய கட்டுடா...! கூத்து முடிஞ்ச கையோட நாங்கல்லாம் கொட்டாயிலயே மேக்கப்ப கலச்சுட்டு கெளம்பி வரல..?’ என்றபடி எட்டி காலால் மீண்டும் ஒரு உதை விட.., என்னவ( ), வெட்கத்துடன் எழுந்து பாத்ரூம் நோக்கி ஓட...., நான்.........................

(அகம் காமாஸ்மி )

இந்த அனுபவத்திலிருந்து....மன்னிக்கவும், இந்த கதையிலிருந்து நீங்கள் அறிய வருகிற நீதி எனப்படுவது யாதென்று ஒரு பின்னூட்டம் இடுக.

No comments: