Thursday 17 September 2009



பொம்மலாட்ட பொம்மைகள் அல்லது எழவு



“பூ....ஊ....ம்.....” என்று நீளமாய் உயிரெடுத்து - அடி வயிற்றை பிசைகிறதாய் அலறுகிறது சங்கு.

“த்ரும்...த்ரும்…”என்று பறை அதிர, ஒலி இழைகள் அலை அலையாய் பிறந்து,...நீண்டு….எதையோ தேடி…தேடி…, ஊர் எல்லையில் போய் எதிரொலித்துக்கொண்டிருந்தது

பார்க்காமல், கேட்காமல், சுவாசிக்காமல், பார்வையாலன்றி... உணர்தலால் அனைத்தையும் அறியும் நிலை. அந்த கோணங்கள் அற்ற பார்வையுணர்வு திகைப்பான அனுபவமாயிருந்தது லட்சுமி கிழவிக்கு.

தன்னைச் சுற்றி கூடியிருந்தவர்களில் அடிக்கடி யாராவது ஒருவர் தன்னையோ தன் ஆடையையோ திருத்திக்கொண்டிருந்தது கிழவிக்கு சங்கடத்தை தந்து கொண்டிருந்தது. ஒப்பாரிக்கு இடையிடையே மூக்கை பாவனையாய் சிந்தி, சிந்தி, பக்கத்து புடவைகளில் துடைத்துக்கொண்டிருந்தனர் பெண்கள். நேற்று வேலிமுள்ளுக்காய் தன்னிடம் அசிங்கமான வார்தைகளுடன் சண்டை போட்ட பக்கத்து வீட்டு அருக்காணி கிழவிகூட , மூக்கை சிந்தியபடி தேம்பிக்கொண்டிருந்தது ஆச்சரியமாயிருந்தது.

கிழவியின் ஒரே மகள் பூங்கோதை, இன்னும் கால்மாட்டிலேயே மூக்கை சிந்தியபடி கிடந்தாள். காலையிலிருந்தே அப்படி இப்படி நகராமல்,ஒவ்வொரு முறையும் புதுசாய் யாரும் வரும்போதெல்லாம் அவர்களை கட்டிக்கொண்டு, ஓ...வென குரலெடுத்துஅழுதுக் கொண்டிருந்தாள். மருமகன் மாரிமுத்து தலைமாட்டுப் பக்கம் நின்றபடி தன்னையே வெறித்துக்கொண்டிருந்தது கிழவிக்கு கூச்சமாயிருந்தது. இதுநாள்வரை மருமகனுக்கு எதிரேகூட வராமல் இழுத்து இழுத்து போர்த்துக்கொண்டு வளைய வந்தவளுக்கு இப்போது அவனது அருகாமை சற்று சங்கடமாய்த்தானிருந்தது. மூக்கிலும் வாயிலுமாய் அவ்வப்போது ஒழுகிக்கொண்டிருந்த திரவத்தை துடைக்க , மருமகன் குனிந்த ஒவ்வொருமுறையும் சட்டென விலகிக்கொள்ள முயன்றபோது..... முடியவில்லை. இனிமேல் செயல்ரீதியாய் எதுவும் தன் வசமில்லை என்பது புரிந்துவிட்டது கிழவிக்கு. மருமகனின் அருகாமைகூச்சத்தில்-வெற்றுமார்பில் விலகிக்கிடந்த மாராப்பை யாராவது சரிசெய்து விடமாட்டர்களா...? என்று மனசு குறுகுறுத்தது. அனிச்சையாய் தானே முயன்றபோது, எழ இயலாமல் கட்டையாய் கிடந்தன கைகள். .

எப்பொழுது நாம் இறந்துபோயிருக்கக் கூடும் என்று யோசித்துப் பார்த்தாள் கிழவி. நேற்றா....? இல்லையே….! ராத்திரி மக கொடுத்த சுடு கஞ்சியை குடிச்சுட்டு திண்ணையில சாஞ்சது ஞாபகமிருக்கு. இடையில....சாமத்துல ஒருக்கா, எழுந்து திண்னையோரமா மூத்திரம் போனதுகூட ஞாபகமிருக்கு,...அப்போ....எப்பதான் செத்துபோனம்னுதான் சரியா தெரியல. திடீர்னு....யாரோ....’ஓ’... ன்னு போட்ட கூச்சல் உணர்ந்து தெளிஞ்சப்போ, கூடத்தில் போட்டு, மகள் ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்க, கூட்டம் கூடிப்போயிருந்தது. பதறிப்போய் ’சட்’டென எழுந்து உட்கார்ந்துக்கொள்ள தோனிய வினாடி,.... அப்படி எதுவும் தன்னால் செய்ய முடியாமல் போவதையும் உனரமுடிந்தது. உடம்பு கட்டையாய் இறுகிப்போய் கிடக்க, லேசாய் சூழல் புரிந்து யோசிக்கும்பொழுதுதான் தான் செத்துபோய்விட்டதாய் புத்திக்கு எட்டியது கிழவிக்கு.

'அட...!ஆக வேண்டியத பாருங்க....சீக்கிரம்...!’-என்று யாரோ பறபறக்க...கொஞ்சநேரத்துக்கெல்லாம் பறைகள் அதிர, மட்டி ஊதுவத்திகளும், பன்னீர் பாட்டில்களும், சாராய நெடிகளும் கலந்து ஒரு எழவு வீட்டுக்குரிய சூழலை கொண்டுவந்து சேர்த்துவிட்டிருந்தது. அந்த அதிகாலை வேளையிலேயே யார் யாரோ எங்கெங்கோ ஓடினார்கள். தகவல்கள் கொடுக்க ஊர்களுக்காய் ஆட்கள் பிரிந்து பறந்து கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் தன் புருசன், வடமலை கிழவனைப்பற்றி வாய் திறந்து பேசாமலிருந்தது ஏமாற்றமாயிருந்தது லட்சுமி கிழவிக்கு.

யாருமே இந்தநேரத்தில் கிழவனைப்பற்றி நினைக்க மாட்டிங்கறாங்களே என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. ஒரு வேலை கிழவனுக்கு தெரியாமலே தூக்கி போட்றுவாங்களோ - என்றுகூட பயம் வந்தது. அந்த பாழாப்போன மனுசன் இப்போ எங்க சுத்திக்கிட்டிருக்கோ கடவுளே....!

கிட்டதட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது புருஷனிடம் கோபித்துக்கொண்டு கிழவி இங்கே வளர்புரத்தில் மகள் வீட்டுடன் வந்து தங்கி. மகள் பூங்கோதையை தன் தம்பிக்கே கட்டிக்கொடுத்திருந்ததில் இப்படி ஒரு வசதியும் அமைந்துபோனது.

புருஷனையும்...,ரெண்டு ஆம்பள புள்ளைகளையும் விட்டுட்டு கிழவி இப்படி மக வீட்டோட வந்து இத்தனை காலமும் இருந்ததுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கத்தான் செய்தது. ஊரைப்பொருத்தவரை காரணம் சாதாரணமானதுதான். அதனால்தான் இன்றுவரை ‘கிழவிக்கு ஆனாலும் இவ்வளவு அழுத்தமும்,ரோசமும் கூடாது.அப்படி என்ன ஊர்ல உலகத்துல இல்லாதத அந்த கிழவன் சொல்லிட்டாரு.?- என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்தது. ஆனால் லட்சுமி கிழவியை பொறுத்தவரை அன்றைக்கு கிழவன் ஏரிக்கரையில் சொன்ன அந்த வார்த்தை....! 'த்தூ....! இனி கட்டைக்கு போற வரைக்கும் உம்மொகத்துல முழிக்கமாடேன்யா நானு...! என் சாம்பல் உனக்கில்ல, முன்ன செத்தா உன் சாம்பல் எனக்கில்லன்னு...நெனச்சுக்கோ....!'- என்று கட்டின துணியுடன் மகள் வீட்டுடன் வந்து சேர்ந்தவள்தான். பத்து வருஷம் பறந்து போய் விட்டது.

இன்னைக்கு செத்து விறைத்துப்போய் கிடக்கும்போதுகூட உறுத்தலாகத்தான் இருக்கிறது கிழவிக்கு. இந்த கடைசி நேரத்திலாவது கிழவன் வந்துரமாட்டானா என்று மனசு துடிக்கத்தான் செய்கிறது இப்பவும். 'அய்யோ....! எப்படியாவது கடவுள் அருளால் வந்துதொலைக்கனும் அந்த மனுஷன். ஏதோ வாய் வார்த்தை வாயிலிருக்க அப்படி ஒரு சொல்லை அன்னிக்கு அந்த மனுஷன் சொல்லிப்புட்டாலும் பொறவு வறுத்தப்பட்டு, என் காதுக்கு வந்து சேர்ற மாதிரி, நாலுபேருகிட்ட பெனாத்திகிட்டுதான இருந்துச்சு. கிழத்துக்கு எப்பவுமே நாக்குல சனி. ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு சொல்லிப்புட்டு பொறவு தவிக்கறதுதான் அதோட வழக்கம்.

கிழவிக்கு புருஷனோட நினைவுகள் விரிய விரிய தவிப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது. இப்போது யாரோ சிலபேர் தன் உடலை அப்படியும் இப்படியும் புரட்டி சுற்றிலும் ஜஸ் கட்டிகளை அடுக்கினார்கள். கிழவிக்கு இவ்வளவு கவலைக்கிடையேயும் சிரிப்பாய் இருந்தது. எத்தனையோமுறை பேரன் முருகேசுவுக்கு குச்சி ஜஸ் வாங்கி கொடுக்கும்போதெல்லாம் தனக்கும் ஒன்று வாங்கி சூப்ப வேண்டும்போல இருக்கும். ஆனால் யாராவது பார்த்துவிட்டால் போச்சு என்கிற பயத்தில் கஷ்டப்பட்டு ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியதாய் ஆகியிருக்கிறது. இப்படி அடக்கி அடக்கி வைத்த ஆசைகள்தான் இப்போது உறைந்துபோய் தன் உருவத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாய் பட்டது கிழவிக்கு. இனி இது மண்ணுக்குத்தான்.

'ஐஸ்' பற்றிய நினைவுகளைத் தொடர்ந்து பேரன் முருகேசுவை நினைத்துக்கொண்டாள். அப்போதுதான் கவனித்தாள் .தலைமாட்டில் நின்றுக்கொண்டு அவ்வப்போது பாட்டியை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான் முருகேசு. அய்யய்யோ இந்தப்புள்ள இனி நான் இல்லாம ஏங்கி போயிடுமே...என்று தோனிய வினாடி, வாரி அணைத்துக்கொள்ள எத்தனித்து...தன் உடலும் அதன் இயக்கமும் தன் கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்து மனம் சோர்ந்தாள்.(மனம்..?).

சற்று நேரத்துக்கெல்லாம் கூட்டம் ஏகத்துக்கு கூடிப்போயிருந்தது. தன் சாவுக்கு இத்தனைபேர் கூடுவார்களா என்பது கிழவிக்கே சற்று ஆச்சரியமாய்தானிருந்தது.

திடீரென பேரமைதி நிலவ, ’இதுவரைக்கும் போதும்’-என்கிறதாய் மூக்கை முந்தானையில் துப்புற துடைத்துக்கொண்ட பெண்கள் பாட்டியிடமிருந்து கவனத்தை திருப்பிக்கொண்டு பக்கத்து பெண்களிடம் புருஷன்,குடும்பம்,குட்டி, என குசலம் விசாரித்துக்கொள்ளஆரம்பித்தனர். தப்படிப்பவர்கள்கூட ஓரங்கட்டி ஓய்வெடுத்துக்கொண்டார்கள். கிழவிக்கு இன்னைக்கு தேதிக்கு எண்பது வயசாவது இருக்கும். கல்யாண சாவுதான...! -என்கிற தொனி எல்லோருடைய பேச்சிலும் அசைவுகளிலும் தொற்றிக்கொண்டு, அவரவர் நீண்ட நாளுக்குப்பிறகான, தங்களுக்கிடையேயான- சந்திப்புகளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். திடீரென ஏதாவதொரு புது வருகை தெரு முனையிலிருந்தே ஒப்பாரியுடன் ஓலமிட்டபடி ஓடிவர, தூரத்தில் குழுமி உட்கார்ந்தபடி அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களில் மூத்தவர்களான சில பெண்கள் நிர்பந்தமாய் சலிப்புடன் எழுந்துவந்து மீண்டும் ஒப்பாரியுடன் மூக்கு சிந்த ஆரம்பித்தார்கள்.

மீண்டும் ஒப்பரிப்பெண்கள் சலிப்புறுவதும் ஒரு பேரமைதி நிலவுவதுமாய் நகர்ந்துக்கொண்டிருந்தது இழவு.

’’என்னப்பா கெழவனுக்கு சேதி போச்சா இல்லயா..? ’’ -என்று யாரோ தலைமாட்டில் கேட்கவும், சட்டென கூர்மையானாள் கிழவி.

’’நீ வேற…,விதி எப்படி வெளயாடுது பாரு! கெழவி சாபம் சும்மா விடுமா?...கெழவி நெனச்ச மாதிரியே இது இங்க கட்டையப்போடும்போது அந்த கெழவன் , கெழவியோட சாபம்...., ஊர் தங்கவிடல. முந்தாநாள்தான் காசி ராமேஸ்வரம்-னு கெளம்பி போச்சாம் கெழம். கெழவி ஆசப்பட்டமாதிரியே ஆய்போச்சு பாரு !’’

அடப்பாவிங்களா…! நீங்களா…, இப்படி ஒரு நெனப்பு நெனச்சுக்கறாதாடா..? என் மனசு கெடந்து துடிக்கற துடிப்பு எனக்குதாண்டா தெரியும். எதோ கோவத்துல அந்தாளு பேசுன பேச்சும், நான் எடுத்த முடிவும்…,முடிவான முடிவா நீங்களே முடிவுப்பண்ணி…., எங்களுக்கே தோனுனாலும் உங்களுக்கு பயந்தே,…. சாகறவரைக்கும் பிரிஞ்சே இருக்க வச்சிட்டீங்களேடா .

ஒரு வயசுக்குமேல புள்ளைங்களுக்கு பயந்து, ஊருக்கு பயந்து , உறவுக்கு பயந்து, ஒட்டி ஒரசிக்கவோ , சிரிச்சி பேசிக்கவோக்கூட முடியறதில்லையே எங்களால. பொம்மலாட்ட பொம்மைங்க மாதிரி பாவனையாத்தான வாழ்ந்துட்டு போக வேண்டியதா இருக்கு ! - எரிச்சலாகவும், அங்கலாய்ப்பாகவும் மனசு ஓடியது கிழவிக்கு.

இப்பொழுதுதான் சட்டென நினைவுக்கு வந்தது கிழவிக்கு. முந்தானாளிரவு சாமத்தில் சட்டென முழிப்பு தட்ட, மூத்திரம் போகவேண்டிய உணர்வில் திண்னையிலிருந்து எழுந்து புழக்கடை பக்கமாய் ஒதுங்கி இருட்டில் சேலையை தூக்கி நின்றுக்கொண்டிருக்க , -வேலி முள்ளுக்கு மறுபக்கம் ஏதோ உருவம் அசைவதை பார்த்து ’பட்’டென பதறிப்போய் சேலையை நழுவவிட்டவள்,

“அடச்சீ...கருமமே...யார்ராவன்...அங்கிட்டு..!...த்தூ...நாதேரி...” என்று கத்த, சட்டென்று நகர்ந்து, விரைசலாய் நடந்து, அங்கிருந்து அகன்றது அந்த உருவம்.

இருட்டில் மறைந்த அந்த உருவத்தை கைகளை புருவத்தில் குவித்து- உத்து, உத்து பார்த்த கிழவிக்கு....அந்த ஜாடை...பகீரென்று நெஞ்சில் உறைத்தது. ‘ அட...நாசமாப்போக...அந்த ..கெழவனாட்டமில்ல இருக்கு..!

மறுபடியும் வந்து திண்னையில் சாய்ந்தவளுக்கு தூக்கம் பறிபோனது.

இப்பொழுது நினைத்துக்கொண்டாள், ஒரு வேலை தூரதேசம் போகும் முன் மன அங்கலாய்புல நம்மள பாக்கறதுக்குதான் அப்படி இருட்டுல வந்து நின்னிருக்குமோ..அந்த ஆளு..?

இப்போது நெஞ்சை அறுப்பது போல் இருந்தது கிழவிக்கு. ‘அடச்சே...அந்தாளுதான்னு புத்திக்குப்பட்டவுடனே...கூப்பிட்டு பேசியிருக்கலாமோ..! யாராவது பாத்துப்புட்டா கருமம் கண்றாவியாயில்ல போயிடும் ..! -ன்னு அன்னைக்கு நெனச்சதை யோசிக்கும்போது தன்மேலேயே எரிச்சலாய் இருந்தது கிழவிக்கு.

புருஷன்கிட்ட பேசறதுக்கு…, அடுத்தவங்களுக்கு ஏன் பயப்படனும்? என்று மனசுக்குள் எதிர் கேள்வி கேட்டுக்கொண்டாலும், வயசாகிப்போனாலே ..இந்த சமூகத்துல ஆசாபாசங்கள மறைச்சுகிட்டு நடிப்பா வாழ்ந்துட்டு போகவேண்டிய நிர்பந்த யதார்த்தமும் புரியத்தான் செய்தது. ஜம்பது வயசுக்கு மேல நம்மளோட அசைவுகள அடுத்த தலமுறதான தீர்மானிக்குது. நாமளும் என்ன நினைப்பாங்களோ ஏது நினைப்பாங்களோன்னு, போலியா வாழ்ந்துட்டு போகவேண்டியதாதானே இருக்கு.

என்னதான் கிழவனை பிரிஞ்சு வந்துட்டாலும் அந்த ரோஷமும் கோபமும் ஒரு வருஷம் கூட தாக்குப்பிடிக்கல. ஒரு உப்பு கொறவுன்னாலும் ஒரப்பு கொறவுன்னாலும் குழம்பு கிண்ணியை தூக்கி அடிக்கற கிழவன் ,…இப்போ மருமக வைக்கிறத சத்தமில்லாம தின்னுட்டு வளய வர்றத கேள்விப்பட்டு எத்தனையோமுறை ரோஷம் உடைந்து போய், புருஷன் வீட்டுக்கே கிளம்பி போய் விடலாமா என்று தோனத்தான் செய்தது. அப்பவும் இப்படி புள்ளைங்களுக்கும், ஊருக்கும் பயந்துகிட்டுதான் சும்மா கெடக்கவேண்டியதாப்போச்சு.

’எதுக்கு இப்போ போய் அந்த பழய கண்றாவியெல்லாம் நெனைச்சுகிட்டு…’-பட்டென நினைவுகளை உதறிக்கொண்டாள் கிழவி.

திடீரென்றுதான் கவனித்தாள். இப்போது சூழலில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. தூக்கு…தூக்கு… என்று பல குரல்கள் உயர , பறைகள் முன்னைவிட உச்ச ஸ்தாயில் முழங்க, மகள் பூங்கோதை ஓவென கதற, சிலர் முனைந்து வந்து கிழவியை தூக்கி பாடையில் வைக்க , முதிய பெண்கள் குலவையிட ,கடைசி பயணம் தொடங்கியது லட்சுமி கிழவிக்கு.

தெருமுனையில் தலமாடு திரும்பி ,…இடுகாட்டு வாசலில் அரிச்சந்திரனிடம் பாடை இறக்கி பாட்டு பாடி,அனுமதி வாங்கி, தகன மேடையருகே மீண்டும் பாடை இறங்கி வாக்கரிசி..,பால் சடங்குகள் முடிந்து..,வெட்டியான் ‘ வேற யாராவது இருக்கீங்களா…வேற யாராவது …வுட்டு போச்சா ..’என்று கூவிக்கொண்டிருக்கும்போதுதான்…திடீரென்று தூரத்தில் ஒருவன் ஓடி வந்தபடியே கூவினான்

“யேய்..,அந்த கெழவன் வந்துகிட்டிருக்கான்யா…!”

“என்னயா…சொல்ற…?”

“எங்கயோ தூரதேசம் கெளம்பி போனவன் விசயம் தெரிஞ்சு போய், அரக்க பறக்க ஓடிவந்துட்டிருக்கான்..!”

“யேய்..போதும்..போதும்…நிறுத்து…! யோவ்…தூக்குங்கயா…தூக்கு…!தூக்கி தகன மேடையில வைங்கப்பா..! அந்த கெழவன் வர்ரதுக்குள்ள சட்டு புட்டுன்னு கொள்ளிய வைங்கப்பா…! அப்பறம் அந்த கெழவி சபதத்துக்கு அர்த்தமில்லாம போயிரும். அந்த கெழவன் மூஞ்சில முழிச்சா ,கெழவி கட்ட... வேகாம போயிடும். அந்த பழி பாவம் நமக்கு வேண்டாம். சீக்கிரம்…சீக்கிரம்.., தூக்குங்க…!”

அட கொல்லைல போறவன்களே..!டேய்..நிறுத்துங்கடா…! அய்யோ …கொஞ்சம் பொறுங்கடா …அந்த மனுசன் மூஞ்ச கடைசியா ஒரு மொற பாத்துக்கறன்டா …! இல்லைனாத்தாண்டா என் கட்டை வேகாது…!

கிழவியின் அரற்றல் யார் காதிலும் விழாமல் போகவே…தட தட வென எரியூட்டும் காரியம் நடந்துக்கொண்டிருந்தது.

தூரத்தில் கிழவன் ஓடிவரும் பிம்பம் மங்கலாய் கிழவிக்கு தெரியத்தொடங்கிய வினாடி, கால் மாட்டில் வைக்கப்பட்ட கொள்ளி , திகு திகுவென உடலெங்கும் பரவத்தொடங்குவதை உணர முடிந்தது.

“அய்யோ…அய்யோ…” - கிழவி மனசு அலற..அலற…, தீ..உடலெங்கும் பரவி…, கொஞ்ச கொஞ்சமாய் பிரபஞ்ச காட்சிகளும்…அந்த கோணங்கள் அற்ற பார்வையுணர்வும் தேய்ந்து அழிந்து….முற்றிலும் சூன்யமாயிற்று..!

No comments: