Tuesday 15 September 2009

கொலையும் செய்வாள்...! (பாலியல் வறுமை காரணமா...?)


கண்ணகி என்பதை ஒரு சந்தர்ப்பவாத சொல்லாடலாக...., பதமாகத்தான் பார்க்கிறேன் நான். கண்ணகி என்பது ஒரு மனுஷி அல்ல. கொள்கை! ஓர் ஆணாதிக்க தேவை! ஒரு பிற்போக்கு தத்துவ சொல்!

எனவே..ஏற்கனவே காலம் காலமாய் நம்மிடையே நிறுவப்பட்ட அர்த்தத்தில் பத்தினி..., கற்பு...., கலாச்சாரம்....போன்ற சொல்லாடல்கள் வழி எழுதப்பட்டதல்ல...இது! என்பதை ஆணித்தரமாக நிறுவிக்கொள்ள விரும்புகிறேன்.

தேனிலவுக்குப்போன இடத்தில் புதுமணக்கணவன் கொலை. கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தொழிலதிபர் கொலையில் துப்புத்துலங்கியது. கள்ளக்காதலுக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது.

பெற்றகுழந்தையை கொன்றுவிட்டு, முன்னாள்

கள்ளக்காதலன் மீது பழி!

நெருங்கிய தோழியை எரித்துக்கொன்றுவிட்டு தற்கொலை போல் நாடகம் ஆடிய காதலனுடன் ஓடிப்போன மாணவி போலீசில் சரண்.

தம்பதிகள் கொலையில் துப்பு துலஙகியது.நான்கு பேரை மணந்த
சாகசக்கொலைகாரி கைது!

காதலித்து விட்டு மணம் புரிய மறுத்த காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி கைது

இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

சமீபத்திய ஒரு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தகவல் என்னவென்றால்,

உணர்ச்சிப்பெருக்கில், சூழ்நிலை சிக்கலில் நடந்த கொலைகள், சாதி, இனம், முன்விரோதம் போன்ற பின்புலத்தில் நடந்த நேரடி கொலைகளுக்கு ஈடாக...(திருட்டு, கொள்ளை சம்மந்தப்பட்ட கொலைகள் நீங்கலாக)

பாலியல், கலாச்சாரம் சார்ந்த, கள்ளத்தொடர்பு காரணமாக நடந்த கொலைகள், எண்ணிக்கை அளவில் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே இருக்கின்றன.

பெண்ணிய சிந்தனை செயற்பாட்டிலிருக்கிற நான் இதை, கற்பு, கலாச்சாரம் என்கிற பின்னணியில் ஆய்வு செய்ய தயங்குகிறேன். எனினும் சமீபகால பெண்களின் இந்தப்போக்கால் திடுக்கிடவேண்டியிருக்கிறது.

ஊடகங்கள் இதை
சுவாரசியத்துடன் பெரிதுபடுத்துகின்றன என்கிற குற்றச்சாட்டுகளையெல்லாம் தாண்டி நம்மைச்சுற்றியே இப்படியாக நிகழும் நிகழ்வுகளையும் கேள்விப்படுவதையும் கண்ணுறுவதையும் மறுத்துவிடமுடியாது.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறைந்த இந்த ஆணாதிக்கவெளியில் இதை கையிலெடுத்துக்கொண்டுப்பேசப்போக...

பெண்ணியப்போராட்டத்திசையில் - நம் தலையில் நாமே மண்ணைப்போட்டுக்கொள்வதற்கு சமம் என்கிற ரீதியில் இதுவரை இதைப்பற்றி பேசத்துணியாமல் இருந்தாலும், ஒட்டு மொத்த சமூக விடியலுக்கு ஏங்குகிற மனதிற்கு இந்த இழிவுபோக்கு அதிர்வை ஏற்படுத்த - ஒரு பொது விவாதத்திற்குள் இதை கொண்டுவர வேண்டியுள்ளது.

அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய எழுச்சிக்காக நாம் கொண்டுவந்த வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்கள் கூட இன்று நேர்மையாக பயன்படுத்தப்படாமல் 80% தவறாகவே பயன்படுகிறது என்று கேள்விப்படுகிறோம்

80% பேர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தும் இந்த சட்டத்தை பயன்படுதுவதேயில்லை என்பது வேறு சோகம்.

பெண்ணிய போராட்ட வெளியில் இருக்கிற போராட்டத்தோழமைகள் கூட இந்த கசப்பான உணமையை மீடியாக்களிலேயே போட்டு உடைத்து நொந்துக்கொள்கிறார்கள. அதிலும் பெண்ணிய போராளிகளில், பெண்களே வருத்தத்துடன் இதை பதிவு செய்கிறார்கள்.

சமீபத்தில் என்னைச்சார்ந்த உறவுகள், நட்புகள் வட்டாரத்திலேயே எனக்கு இப்படிப்பட்ட நேரடி அனுபவங்கள் நிகழ்ந்தது.

திருமணமான ஒரே வாரத்தில் கணவனிடமிருந்து பிரிந்து...சேர்ந்து வாழமறுத்து...தாய்வீட்டுடன் வந்துவிட்ட பெண்ணொருத்தி சிலமாதங்களிலேயே வேறொரு நபருடன் (உல்லாசமாக..!)இருக்கும்நிலையில் பிடிபட்டபோது....

சற்றும் தயங்காமல் என் கணவனுக்கு ஆண்மையில்லை அதனால்தான்...,

என்று சற்றும் கூசாமல் பொய்சொன்னாள்.

இப்போழுதெல்லாம்,காதலில்....கள்ளக்காதலில் என மாட்டிக்கொள்ளும் நிறையபெண்கள் சொந்த சகோதரன், தகப்பன், மாமனார் என்கிற உறவுகள் மீது பாலியல் துணிபு குற்றச்சாட்டுகளை அபாண்டமாக சுமத்தி தன்னை காத்துக்கொள்கிற கயமையும் நிறைய நடக்கிறது.

நான் அகமும் புறமுமாய் நன்கு அறிந்த நண்பனுக்கே கூட இது நேர்ந்திருக்கிறது.

விவாகத்தை ரத்து செய்துகொள்ளவும், விரும்புகிற வாழ்க்கையை வரிந்துகொள்ளவும் சட்டரீதியாக...,ஏன் சமூக ரீதியாக க்கூட அங்கீகாரம் கிடைத்துவிட்ட பிறகும் ஏன் எதற்காக இந்த உயிர்பலி வரையிலான இழிந்த நடத்தைகள்...நடக்கிறது என்பதை கொஞ்சம் ஆய்வுக்குட்படுத்தித்தான் தீரவேண்டும்.

சமீப காலங்களில் ஆண்களின் கள்ளக்காதலுக்காக நிகழ்ந்த உயிர் பலிகளைவிட பெண்களின் கள்ள காதலுக்காக நிகழ்ந்த உயிர்பலிகள்தான் அதிகம் என ஒரு கசப்பான புள்ளி விவர
கணக்கு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்னையென்று தெரியவில்லை.

வரதட்சணைக்கொடுமை, குடும்ப வன்முறை குறித்து வருகிற புகார்களில் விசாரணையின் முடிவில் இதில் போலியான புகார்களே அதிகம் என காவல்துறை அறிக்கையே சொல்கிறது.

உண்மையான புகார்களையும் இப்போது காவல்துறை சந்தேகத்துடனே அனுகவேண்டியுள்ளது.

வெளிப்படையான ஆணாதிக்கத்திற்கெதிராக...பெண்ணிய இயக்கங்களின் தேவையைப்போல, ஆண்களும் இப்போது அமைப்புகளாக ஒருங்கிணைந்துக்கொண்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பெண்கள் காக்க ஏற்படுத்திய சட்டங்களின் உச்சபட்ச சலுகைகள் அப்பாவி ஆண்களுக்கு பிரச்னையாய் இருப்பதை மறுப்பதற்கில்லை.

நாகரீகம், பெண்விடுதலை, பொருளாதார தன்னிறைவு, கல்வி போன்றவற்றை காரணமாக சொல்லும் பிற்போக்கு வாதங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில், இதில் குற்றவாளிகளில் பெரும்பாலும் இந்த தலைப்புக்குள் அடங்காத சாதாரண பெண்கள்தான் அதிகம்.

அதுமட்டுமின்றி லஞ்சலாவன்யத்தில் கைதாகி முக்காடிட்டபடி கோர்ட்டுக்கு செல்லும் அதிகாரிகள் தொடங்கி-

encounterகளினாலோ, ரௌடிகளின் முன்விரோதங்களினாலோ கொல்லப்பட்டு வீதியில் கால்பரத்தி இறந்துகிடக்கும் பெண்தாதாக்களின் புகைப்படங்கள் வரை பத்திரிக்கைகளில் இப்போதெல்லாம் அடிக்கடி காணக்கிடைக்கின்றன.

இதை பொருளாதார வறுமை, பாலியல் வறுமை, கலாச்சார வறுமை என்று பல காரணங்களில் எந்த முனைபற்றி விவாதிக்க தொடங்குவது என்றே புரியவில்லை.

இதுகுறித்து ஒரு பொதுவிவாதம் அவசியப்படுகிறது. தோன்றியவர்கள்,தோன்றிய திசையில் தொடர்ந்து எழுதி வையுங்கள்.

குற்றப்பின்னணியில் ஆணென்ன பெண்ணென்ன என்ற பொது புத்தி யோசித்தலும்....நடப்புகள் கவலையளிப்பதாகவே உள்ளது.

எனக்கு மூச்சுமுட்டுகிறது. இத்துடன் முடித்துக்கொள்கிறேன் கவலையுடன்....



1 comment:

ஜெயகாந்தன் said...

புதியதொரு விவாதத்திற்கு சங்கெடுத்து ஊதிவிட்டீர்கள்...நல்ல முயற்சி