Monday 5 January 2009

டி.சிவகுமார் கவிதைகள்

வாய்மை

குறி விறைத்து
புணர்ச்சிக்காய் அலையும்
பொய்மை.
புணர்ச்சியின் விளைவாய்
பிறந்து விழும்...தொடர்ச்சியாய்
மேலும் மேலும் பொய்கள்.
வம்சம் வளர்க்கும்
பொய்மைக்கெதிராய்
மலட்டுத்தனத்துடன்
மௌனமாய் வாய்மை.
சரிதான்
வாரிசொன்றெதற்கு
சாஸ்வத வாய்மைக்கு.

காமம்

பிறந்துவிழும் முனைப்பில்
யோனி தேடும்
கர்ப்பத்துள் முற்றிய காமம்
பிரசவ வேதனையின்
உக்கிரம் தாங்காமல்
உருக்குலையும் உடல்.
பிறந்து விழுந்த பிறகும்
அறுபடாமல்...
தொடர்பாய் தொங்கி கிடக்கும்
தொப்புள் கொடி
வழக்கம் போல்
நிறைத்துக்கொள்ளும்
கர்பப்பை தன்னுள்
அடுத்த கருவை.

நிர்வாண சங்கு

சாத்தியப்பட்ட இலக்குகளில்
சுவாரசியமற்று
அசாத்திய இலக்குகளில்
ஆர்வமற்று
வாழ்ந்து கழிகிறது வாழ்க்கை.
நிஜத்தை புறக்கணித்து
வெறும் நம்பிக்கையை மட்டும்
எப்படி நம்பும் மனம்.
நிர்வாணம் சுகமாய் பட
ஆடைகளை பற்றிய அக்கறை
அற்று விட்டது.
சும்மா கிடக்கிறேன்
யாராவது
ஊதிக் கெடுக்காமலிருந்தால் சரி.

ஹைக்கூ..?

அடுப்பிலிட்டு எப்படி எரிப்பேன்
தட்டிய வரட்டியில்
இறந்துபோன அம்மாவின் விரல்கள்.
...........................................................
மொட்டை மாடியென
எப்படி சொல்வது..?
நீ தான் தினம் பூக்கிறாயே..!
...........................................................
சாக்கடை தேங்கி
நாற்றம்
துவாரம் அடைத்துக்கொண்டு
ஒரு பூ..!
............................................................
பாலருந்தும் குழந்தை
எதிரே சதை திண்ணும் கண்கள்
பசிகள்.
....................................................
பிரதிபலிக்க ஏதுமில்லாத
கணம் தேடி
கண்ணாடி.
......................................................

No comments: