திருப்பத்தூர்
16.10.93
அன்புள்ள பூரணி அக்காவிற்கு! சிவகுமார் எழுதுவது,
வழக்கம்போல் நலம் நலமறிய ஆவல்
என்று தொடங்க முடியாத கடிதமக்கா இது.
அக்கா ஞாபகமிருக்கிறதா? இங்கே திருப்பத்தூரில் பக்கத்து வீட்டில் நீங்கள் குடியிருந்தபோது உங்களுக்கு எனது நண்பன் ஒருவனை அறிமுக படுத்தியிருக்கிறேன். வெங்கி.வெங்கடேசன்.
அந்த நாட்களில் நாம் எதை குறித்துதான் பேசவில்லை!
அலைகளைப்பற்றி பேசியிருக்கிறோம் நினைவிருக்கிறதா? அதன் அழகு.....கொடூரம்...விசித்திரம் குறித்து எவ்வளவு பேசியிருக்கிறோம்! எதிரெதிராய் ஏன்,அடுத்தவருக்குத் தெரியாமல் இரகசியமாகவும் கூட எவ்வளவு விவாதித்திருப்போம்!
அப்படி ஒரு அலை அந்த வெங்கடேசனை வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட்டது அக்கா!
போனவாரம் நான்காம் நாளின் காலை பொழுதில் ஒரு தூறல் நேரத்தில் அந்த வெங்கடேசன் செத்துப்போய்விட்டான்.
'ஐயோ!'....'ஐயோ...!'என்று முகத்திலறைந்து கொண்டு ஓடினோம்.' ஐயோ...சிவா! வெங்கடேசனைப்பாரு!....எதையோ.....பூச்சி மருந்தாட்டமிருக்கு...குடிச்சிட்டான்..ஐயோ எம்புள்ளய பாருப்பா!'-அவனுடைய அம்மா அலற.....மூக்கில் இரத்தக்கோடுகள் இறங்கி சொட்டிக்கோண்டிருக்க...மல்லாக்கக் கிடந்தான் என் வெங்கடேசன்.
'தூக்கு....தூக்கு...!உயிரிருக்கு....உயிரிருக்கு! 'ஒரு கோடி உதடிகள் என் முதுகில் படபடக்க அநிச்சையாய் தூக்கிக்கொண்டு ஓடினோம்.
மூக்கின் இரத்தம் ஒழுகி எங்கள் தோள்பட்டையில் நசநசக்க வெளியே ஓடி வந்தோம். சிகப்பாய்...கருஞ்சிவப்பாய் வெங்கடேசனின் இரத்தம்.
வானத்தை யார் கிழித்துப்போட்டார்களோ தெரியவில்லை. சடசடவென்று இரத்த பொட்டுகளாய் முகத்தில் அறைந்து அறைந்து வீசலாய் இறங்கியது இரத்த மழை. பிரபஞ்சமே இரத்த உருவமாகி உருகி ஒழுகியது. அரை நொடியில் காற்றுவெளிகள் சிவந்து' ஓ 'வென அலறியது.
இரத்தமாய் ஊத்துகிற மழை வலுத்துப்போக ரோடெல்லாம் சொதசொதப்பாய் இரத்தச்சேறு பிசுபிசுப்பாய் பாதங்களை பற்றிக்கொள்ள ஓட முடியாமலாய் உணர்ந்தேன். மழையின் இறைச்சலூடே வெங்கடேசனின் ஏளன சிரிப்பு ஒலிகள் பட்டுத்தெறிக்க...தெறித்த ஒலி துண்டுகள் தூறப்போய் இடிகளாய் எதிரொலித்தது.
நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை. கால இடைவெளிகள் இழைகளாய் நீண்டு நீண்டு எங்களை கட்டி நிறுத்துகிறதாய் உணர்ந்தேன்.
'வெங்கடெசு.....வெங்கடேசு' தெருவின் கதவு எண்கள் கதறி கதறி நாலா திசைகளையும் நிரப்பிக்கொண்டு வந்த்து. சட்டென வெளிச்சம் கருத்துப்போய் பொழுது சாய்ந்த்து. வெளிச்சத்தை சுருட்டி அக்குளில் இடுக்கிக்கொண்டு சிரித்தான் வெங்கடேசு.
மழை இன்னும் வலுத்து காற்று இனுக்குகளின் இடைவெளிகளை நிரப்ப...ஈர அடர்த்திகளில் திசைகள் தீப்பற்றி எரிந்த்து. எல்லா திசைகளுக்கும் ஒரே முகமாகிப்போக,ஜாடை வித்தியாசப்பொராட்டத்தில் ....தினறினோம்.
திசைகளையும் திருடி சுருட்டிக்கொண்டு வெங்கடேசு சிரித்தான்.
வானத்தை கூட வெங்கடேசுதான் திட்டமிட்டு கிழித்திருப்பானோ? இப்படி இரத்தம் கொட்ட செய்தானா? எல்லாமே அவனுக்கு முடிந்திருக்கிறது. திட்டமிட்டு செய்ய முடிந்திருக்கிறது.
உன்னாலே என்னாலோ எதையும் திட்டமாய் செய்துவிட முடியாது பூரணி அக்கா.கற்பனாவாத கல்குதிரை ஏறி திசை குழம்புபவர்கள் நாம். குதிரை ஓட விட்டு அதன் முதுகில் கல்லாய் சமைந்திருப்பவர்கள். இயல்பாய் சூழல் மாற...குதிரை ஓடியதாய் ஏமாறுபவர்கள்.
நிறங்களின் பெயர்களை மாற்றி வெண்டுமானால் பாவனைகாட்டலாமே தவிர நிறங்களையே மாற்றிவிட முடியுமா என்ன?! எந்த பூ நிறம் மாறி பூத்திருக்கிறது நம் தோட்டத்தில். இயல்பில் இழைந்துபோன வாழ்க்கையிலிருந்து விலகி விலகிப்போய் நீயும் நானும்தான் ஏமாந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது அக்கா! நான் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிற வெங்கடேசுதான் ஒரு வேளை சரியோ...?
நேரங்களில் நிறை ஏறிக்கொண்டிருந்தது. வெங்கடேசன் கணத்துப்போய்...வெற்றியடைந்து கொண்டு இருந்தான். நம்பிக்கைக்கண்களுக்கு நிறங்களின் பேதம் குழம்பிப்போய்விட....எல்லா திசைகளின் அடர்வுகளிலும் சிகப்பு தீற்றல்கள்தான் தெரிந்தது. ஒழுகி வழிந்தது. காதோரம் வெங்கடேசு சிரிப்பதாய் தோன்றியது. சிரிப்புக்கூட சிவப்பு பிரவாகமாகி பிரஞைகளுக்காய் நுழைந்து அடர்ந்தது. சிவப்பு அடர்ந்து..அடர்ந்து.....கருத்தது. கருப்பு.....கருப்பு...சிவந்த கருப்பு எதை சொல்கிறது...?
சிவப்பின் ஆழம் கருமையா? அப்படித்தானா? ஞானம் தோற்று ஓட அங்கே சட்டென விழுந்த ஒரு ஓட்டையில் வழுக்கி உள்ளே...உள்ளே...ஆழபயணித்து ....பயத்தில் அலறுகிறது மனசு.
ஆழமாய் வழுக்கி போக போக கருமையின் அடர்வு அதிகமாகி..சூழல் உணரும் முயற்சியில் விழிகள் தோற்றுத்திணற.....கண்களை காணவில்லையாய் உணர்ந்து உயிர் உறைகிறது. இமைகளை எவ்வளவு விரித்து பார்த்தாலும்...அடர்ந்த கருப்பே உள்ளிரங்கி நிறைகிறது. இழைஇழையாய் இணைந்து இறுகி அடர்ந்து 'ஓ' வென ஓலமிடுகிறது. அவ்வளவுதானா? வெங்கடேசா....அவ்வளவுதானா?இருட்டிவிட்டாயா?....இந்த இருட்டில் எந்த ஒரு இழையாய் இணைந்திருக்கிறாய்....?ஒரு துணுக்காய் விண்டு தொங்கினாலும் முனைபற்றி இழுத்துவிட முடியும்....எங்கே....எங்கே...?
நான் வேண்டாமா வெங்கடேசு உனக்கு? உண்மையில் நான் வேண்டாமா? நான் வரைந்து வைத்திருந்த ஒரு படத்தை கேட்டு கேட்டு தொந்தரவு செய்வாயே-அம்மாவின் கணத்த மார்புகளை பிடித்து பசியாறும் ஒரு குழந்தையின் படம்- அது வேண்டாமா? அதை நீ கேட்டபோதெல்லாம் மறுத்து உன்னை விரட்டியிருக்கிறேன். மறந்துவிடு!வெங்கடேசு...பழசையெல்லாம் மறந்துவிடு. இப்போது கண்டிப்பாக தருகிறேன். வா! வந்துவிடு!
எனது வார்த்தைகளின் ஒலிகள் அந்த குருட்டு பிரதேசத்தின் இருட்டு சுவரெங்கும் மோதி மோதி எதிரொலித்துக்கொண்டிருக்க....அந்த கருத்த திட இருட்டின் ஓர் இழை மட்டும் பட்டென அறுபட்டு தொங்கியது. அந்த இழை விடுபட்ட இடைவெளியிலிருந்து எனது ஓவிய அம்மா இறங்கி வந்தாள்...எங்கே என் பிள்ளை...?எங்கே என் பிள்ளை...? என்றபடி.
சடாரென்று கச்சை அவிழ்த்துக்கொண்டு விம்மிய மார்பு காம்பிலிருந்து ஒரே ஒரு துளி பால் அந்த இருட்டு பிரதேச தரைகளில் விழுந்து தெரித்து சிதறியது.
நொடியில் எல்லாம் விலகி பிரபஞ்சம் முழுதும் பால் வெள்ளையாய்....வெளிச்ச கீற்றுகளால் மின்ன.....நான் சுதாரிப்புக்கு வந்த போது நாசித்துவாரம் எங்கும் ஆஸ்பத்திரி வாடை ஆக்ரமித்திருந்தது.
'இறக்கு....இறக்கு....மெல்ல....மெல்ல...'-கூட்டம்
'டாக்டர்....எம்புள்ள...எம்புள்ள...'-வெங்கியின் அம்மா
ஆஸ்பத்திரி! பால் வெள்ளை நிறத்தில் அவர்களும் கட்டில்களும் மனிதர்களும். கருப்பு இருட்டினூடே எப்போது இந்த வெள்ளை வெளிச்ச விளிம்புக்கு வந்தோம்? ஒரு துளி முலைபாலின் சிதறலின் போதா?
'என்னத்த.... குடிச்ச....?....தம்பீ...சொல்லு...என்னத்த...குடிச்ச'-டாக்டர் வெங்கடேசனின் காதோரமாக கத்த'....அலைகளை....அலைகளை குடிச்சேன்'-என்றான் வெங்கடேசன். கல்லாய் சமைந்திருந்த வெங்கடேசன். உதடசையாமல் உருவம் அசையாமல் எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு மேக கூட்டிலிருந்து சத்தமாய் கத்தி சிரித்தான். ஆனால் கட்டிலில் கல்லாய்.
டாக்டர் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார். கல்லை புரட்டி புரட்டி ஈரம் தேடினார்.' என்ன தம்பீ குடிச்ச...இத பார்...என்னை பார்....டாக்டர் பார்.....சொல்லு...உணர்வு தெரியாதா...?நான் கிள்ளறது தெரியுதா...?தம்பீ....தம்பீ....!'ஆளாளுக்கு கல்லை புரட்டினார்கள். உளிகளாய் செதுக்கினார்கள்.
தொடர்ந்து கல்லில் விழும் உளிகள் . ஒன்று மழுங்க...இன்னொன்று...மழுங்கி மழுங்கி...மற்றொன்று...அறையெங்கும் 'ஓ' வென்று கதறி, ஓய்ந்து விழும் உளிகளின் ஒலிகள் எதிரொலித்த்து. கல் சிதையவில்லை. ஒரு துணுக்கு கூட தெரித்து விழவில்லை. ஆனால் உளிகளின் ஓலத்தில் நான் சிதைந்தேன். சிதைந்து சிதறி அறையெங்கும் நிறைந்தேன். மனித பெருமூச்சுகளின் உஷ்ண காற்றில் கலைந்து சிதறி பறந்தேன்.
'உங்களுக்கெல்லாம் தெரியாது. அலைகளை உங்களுக்கு தெரியாது. அலைகள்னா சிவாவுக்கு தெரியும் என் அலை எதுவென்று சிவாவுக்கு தெரியும்'-வெங்கடேசு மேக கூட்டிலிருந்து மீண்டும் குரலெடுத்து கூவினான்.
'ஐயோ....!' என்றபடி தலையை பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன்.
அக்கா! நமக்குத்தெரியும். நம் நண்பர்கள் நிறையபேர் அலைகளூடே மறைந்து போயிருக்கிறார்கள்.மீண்டு வந்து கதை சொல்லியிருக்கிறார்கள். தங்களை வாரிச்சுருட்டிக்கொண்டு போன அலைகளின் பலம் சொல்லி,குணம் சொல்லி.....சொக்கியிருக்கிறார்கள்.
தொலைவிலிருந்து எல்லா அலைகளும் ஒரே நிறமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். இறங்கி ஆட்பட்டு மூழ்கியபின் நிறம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வெங்கடேசனை சுருட்டிக்கொண்ட அலையின் நிறம் சிகப்பு. இரத்தம் குடித்த நெருப்பின் சிகப்பு. நெருப்பு அலை பெயர் ராதாவோ சீதாவோ என்று ஞாபகம்.
கானல் அலைகளில் கால் நனைக்க ஓடி-கானாமல் போன உங்கள் கல்லூரி தோழி பாகீரதி!-அவள் கதையை ஒரு வெக்கை நிறைந்த மதிய பொழுதில் எனக்கு சொல்லியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா?
என் நண்பன் செல்வம்கூட அவனை சுருட்டிக்கொண்டு போய் கொன்று போட்டு விட்ட அக்னி அலைகளைப்பற்றி சொல்லியிருக்கிறான். அது சுட்டபோது சுகமாய் செத்து போனதாய் கூறியிருக்கிறான். மறுபடியும் தான் பிழைப்பதெல்லாம் இனிமேல் இல்லையென்றும் இப்படியே செத்துப்போய் உலவுவதே உத்தேசம் எனக்கூறி சிரித்திருக்கிறான்.
இன்னும் நிறைய பேர் நிறைய சொல்லியிருக்கிறார்கள். ஆனால் என் மதில்கள் எனக்கு அலைகளை பற்றி எதுவுமே சொன்னதில்லை.
என் மதில் சுவருக்கு மறுபக்கம் அலைகள் அறைந்ததை உணர்ந்திருக்கிறேன். அலறலாய் ஓடி வந்து பளீரென்று மோதி சிதைந்த அலைகள்...
வெறுமனே ஈரமாய் தொட்டுப்போன அலைகள். சலிக்காமல் ஓடி ஓடி வந்து சதா சுவர் நனைத்த அலைகள். எப்போதும் ஈரம் நிலைத்திருந்ததாகவே எனக்கு நினைவில்லை.என் மதில் சுவறில்தான் எவ்வளவு வெக்கை! 'ஆ' வென வாய் பிளந்து அத்தனை ஈரத்தையும் விழுங்கி….விழுங்கி ஜீரணித்து விடுகிற வெக்கை.
சில வேளைகளில் அலைகளின் தொடர்ந்த தாக்குதலில் மதில் சுவர் ஊறிப்போய் ஈரம் மறுபக்கம் வந்து தலை காட்டியதும் உண்டு. குழம்பிப்போய் மதில்மேல் ஏறி அதன்மீது பூனையாய் நடந்திருக்கிறேன். மறுபக்கம் அலைகள்' ஹோ' வென கை வீசி அழைத்திருக்கின்றன. மாற்றி மாற்றி நிற ஜாலங்கள் காட்டி ஏமாற்றியிருக்கின்றன.குதித்து விட தோன்றினாலும்…ஞானம் குழைத்து கட்டப்பட்ட மதில் சுவர்களில் பசைகளாய் பாதம் ஒட்டிக்கொண்டுவிட….மதில் மேலேயே அசையாமல் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு ஜாக்கிரதையாய் பழைய நிலைக்கே இறங்கி விடுவதுதான் வழக்கமாகிவிட்டிருந்தது.
ஆனால் இப்போது வெங்கடேசனை இந்த நிலைக்கு ஆட்படுத்திய அலைபற்றி எனக்கு தெரியும். நெருப்பு அலை. இழுத்து அணைத்து சாம்பலாக்கி விடுகிற அலை. எப்போதும் இறை தேடுகிற அலை. என்னைப்போல்…..நம்மைப்போல் வெங்கடேசனுக்கு மதில் சுவரும் இல்லை…மண்ணாங்கட்டியும் இல்லை. வெற்று வெளி கரை நனைத்து நனைத்து…அலை விழுங்கியே விட்டது. எல்லாம் முடிந்தே விட்டது.
நேற்று வெங்கடேசனுக்கு 7ம்நாள். அவனது ஆத்ம சாந்திக்காக வேணும் சொல்லித்தானே தீரவேண்டுமென முகவரி தேடி போனேன். தெருவின் கடைசி வீட்டை காட்டினார்கள். மொட்டைமாடியில் வினாடிக்கொருமுறை தாவணி திருத்திக்கொண்டு அவள் ,எதிர் வீட்டு மொட்டை மாடியில்,அடிக்கடி தலையை கோதியபடி வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு ஏதோ சைகை செய்தபடி எவனோ.
வெங்கடேசு எழுதிய
கடைசி கடித்ததில் குறிப்பிட்டிருந்தது இவனைத்தானா?
புதிய கரை!
வெங்கடேசனின் ஆத்மா சாந்தியடையாவிட்டால்தான் என்ன வெறுமனே திரும்பி நடந்தேன்.
2 comments:
நல்ல கதை
கதையில்லீங்க நிஜம்..!
Post a Comment