நிர்வாணக் கேள்விகள்
என் கேள்விகளின் நிர்வாணத்தை
ரசிக்கின்றன
உடை சுமந்த உன் பதில்கள்
எனினும்...
களைந்த பின்னும் உடல்வாடை சுமக்கும்
உடைகளைப்போல்...
தயங்கி தயங்கி...
களைந்த பின்னும் உடைவாடை
சுமக்கும் உன் பதில்கள்
இன்னும்
உன் பதில்களின்
நிஜமான நிர்வாணத்திற்காய்
காத்திருக்கிறது...
நிஜமான நிர்வாணத்துடன்
என் கேள்விகள்.
உன் ஞாபகம்
மழையின் வரவில்
சன்னல் வழி சாரலில்
புலர்ந்த பொழுதின் புது பூவில்
தாவர இளந்தளிரில்
புல் நுனி பனித்துளியில்
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில்
மயங்கும் மஞ்சள் வெயிலில்
குயிலின் கூவலில்
குளிர்ந்த நெருப்பில்
சுட்ட பனியில்
தூர-குழலின் இழையில்
விளக்குச்சுடரின் நடன நளினத்தில்
-என்று எதிலும் எப்போதும்
உன் ஞாபகம்...உன் ஞாபகம்...உன் ஞாபகம்
என்றெல்லாம் பொய் ஏன் சொல்ல வேண்டும்?
உண்மையில்
உன் ஞாபகத்திற்கிடையே
இடறுவதில்லை இவை எதுவும்
எனக்கும் என் கவிதைக்கும்.
சாகசம்
எப்போதுமே
அர்த்தங்களுக்கு அகப்படாமல்
சாகசம் செய்கிறது உன் வார்த்தைகள்
ஆனால்...அர்த்தங்களை சீண்டியபடி.
சரி சொல்!
இந்த கண்ணாமூச்சியாட்டத்தில்
உன்னை தீண்ட வேண்டுமா?
அல்லது தீண்ட முடியாமல் தவிப்பவனாய்
நடிக்க வேண்டுமா நான்..?
1 comment:
பொதுவில் நிர்வாணத்தை வைத்து காதலின் பெயரால் அதை ரசிக்கவும்
வைத்துவிட்டீர்...இயக்குநரே..!
உங்களின் சாகசத்திற்கு ஒரு சபாஷ்..!
Post a Comment