நன்றி; செப்டம்பர்2008, கருஞ்சட்டைத்தமிழர்
இதழில் வெளியான செய்தி
சொல்லாக் கதையை சொல்லத் துணிந்தோம் - திருநங்கையர் பற்றி ஒரு திரைப்படம்
இரா.உமா
இந்தச்சமூகம் அவர்களை விலக்கிவைத்து வேடிக்கைப் பொருளாக்கி விட்டது. தங்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இச்சமூகத்திலிருந்து அவர்களும் ஏனோ விலகியே இருக்க வேண்டியதாயிற்று. இயற்கை இழைத்த குற்றத்திற்கு இவர்களுக்கு ஆயுள் தண்டனை. மரண வேதனையை விடக் கொடுமையானது எது தெரியுமா? தான் வாழுகின்ற சமூகத்தின் உதாசீனமும், புறக்கணிப்பும்தான். அப்படிச் சமூகத்தின் உதாசீனத்திற்கும், புறக்கணிப்புக்கும் ஆளான அவர்கள் கொடுஞ்செயல்கள் புரிந்தவர்களல்லர்; கருவில் உண்டான மரபணு மாற்றத்தால் உருவில் மாறியவர்கள். அவர்கள்தான் திருநங்கைகள்.
ஆணும், பெண்ணும் இணைந்த உருவமான லிங்கத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் இச்சமூகம் இவர்களிடம் மட்டும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் நியாமில்லை. நியாயங்களும், தீர்ப்புகளும் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டுதான் வந்துள்ளன. அதே சமயத்தில் எந்த ஒன்றும் தானாகவே மாறிவிடவில்லை. மாறியும் விடாது. மாற்றுவதற்கான முயற்சிகளை யாராவது சிலர் முன்னெடுக்கும் போதுதான் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அப்படித்தான் திருநங்கைகளைப் பற்றிய சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தை மாற்ற, அரசாங்கம் உட்பட ஆங்காங்கே பலர் பலவிதங்களிலும் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் சிவகுமார், சக்தி வாய்ந்த காட்சி ஊடகமான திரைப்படத்தை மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறார். திரைப்படங்களில், கேலிக்குரியவர்களாகவும், பாலியல் தொழிலாளிகளாகவும்தான் இதுவரை திருநங்கைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மிகச் சில படங்கள் கொஞ்சம் விதிவிலக்காக இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும் கூட திருநங்கைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், உளவியல் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசவில்லை.
இயக்குநர் சிவகுமாரின் முதல் படமே அதைப் பற்றித்தான் பேசுகிறது. பால் (இனம்) ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் படமென்பதாலோ, என்னவோ படத்தின் பெயரே “பால்”. இன்பமானாலும், துன்பமானாலும் அதை அனுபவித்தவர்களால்தானே அந்த உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்த முடியும். அதனால்தான் திருநங்கைகளின் “வலியை” வெளிப்படுத்த ஒரு திருநங்கையையே இப்படத்தின் கதாநாயகியாக்கி இருக்கிறார் இயக்குநர் சிவகுமார்.
கதாநாயகி ஐஸ்வர்யா திரைப்படத்திற்காக “கற்பகா”ஆகியிருக்கிறார். தோற்றத்தை வைத்து திருநங்கை என்று சொல்லிவிட முடியாதபடி இருக்கும் அழகான பெண். அடுத்து பாராட்டுகளோடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர் இப்படத்தின் கதாநாயகன் ‘காதல்’ கந்தாஸ். காரணம், நடன இயக்குநரான இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது.
ஊடகத்துறையில் வேலைசெய்யும் நாயகி, தான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். வேலை தேடிக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும், அவன் நண்பர்களுக்கும், தான் இருக்கும் ஊடகத்துறையில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார். அங்கு மொட்டுவிடுகிறது காதல். இருவழிக் காதலாக இருந்தும் தன் காதலை வெளிப்படுத்தத் தயங்கும் கதாநாயகி, தன் காதலை ஒரு தலைக்காதலாக்கி, தன் காதலுக்கு முடிவுரை எழுதிவிடுகிறார். இந்நிலையில் கதாநாயகனின் காதல் என்னவாயிற்று என்பதுதான் படத்தின் உச்சகட்டம். படத்தின் இன்னொரு கதாநாயகியாக புகழ்பெற்ற நடிகை ஒருவர் நடிப்பார் எனத் தெரிகிறது.
நகைச்சுவைக்கு மயில்சாமியும், கருணாசும், முக்கியமான வேடங்களில் ரேவதி, கலைராணி, ஜி.எம். குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தளங்களாக சென்னை மற்றும் தேனி மாவட்டப் பகுதிகளையே தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்தார் இயக்குநர். ஒளிப்பதிவு ஆர்.மகேந்திரன், இசை பிரியதர்சன், உதவி இயக்குநர்கள் சேரன், லிவிங்ஸ்மைல் வித்யா, பாடல்கள் விஜயசாகர், நந்தலாலா, ஆண்டாள் பிரியதர்ஷிணி, படத்தொகுப்பு லெனின்.
இப்படிப்பட்ட நல்ல முயற்சிகள் வெற்றியடைய வேண்டும். திருநங்கையான கதாநாயகியை ஊடகத்துறையில் வேலை செய்யும் ஆளுமைமிக்க பெண்ணாகச் சித்தரித்துள்ள இயக்குநர் சிவகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படம்வெற்றியடைய நமது வாழ்த்துகள்.
இயக்குனர் சிவகுமார்:
படத்தின் “கரு” என்ன?
இது திருநங்கைகளைப் பற்றிய முழு நீளத் திரைப்படம். மற்ற படங்களில் இருப்பது போன்ற, குத்துப் பாடல்கள், நகைச்சுவை, சென்டிமென்ட், சண்டைக் காட்சிகள் அனைத்தும் இதிலும் உண்டு. முதலில் திருநங்கைகளை அவர்களது குடும்பத்தினர் அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கருவாக அமைந்துள்ளது.
முதல்படமே திருநங்கைகளைப் பற்றி எடுப்பதற்கு என்ன காரணம்?
ஒரு சமயம் கோயிலுக்குள் சாமி கும்பிடச் சென்ற திருநங்கை ஒருவரை, அங்குள்ள பெரியவர்கள் வெளியில் பிடித்துத் தள்ளியதைப் பார்த்தேன். மிகவும் வேதனையாக இருந்தது. அவர்களைப் பற்றி பதிவு செய்ய விரும்பினேன். எனக்குத் தெரிந்தது சினிமா. அதையே அதற்கான வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
நீங்கள் பார்த்த நிகழ்வு உங்களைப் பாதித்தது சரி. உங்கள் குழுவினர் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
திருநங்கைகளைப் பற்றி நிறைய தெரிந்துகொண்ட பிறகுதான் படம் பண்ணும் முடிவுக்கு வந்தேன். நான் படித்தும், நேரிலும் தெரிந்து கொண்டவற்றை என் குழுவினருக்குப் பொறுமையாக விளக்கிக் சொல்லிப் புரிய வைத்தேன். இப்பொழுது என்னைவிட எனது குழுவினர் பல மடங்கு உணர்வோடும், உற்சாகத்தோடும் பணியாற்றுகின்றனர். அதேபோல் என்னுடைய சிறப்பான பாராட்டுக்குரிய நபர் கதாநாயகன் ‘காதல்’ கந்தாஸ். தனது யதார்த்தமான நடிப்பில், எங்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
திருநங்கையை - திரையில் ஒரு சராசரி பெண்ணாகக் காட்டுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?
ஆம். இருக்கிறது. மிகுதியான பெண்தன்மை காரணமாக அவர்களுடைய உடல்மொழியில் அதிகப்படியான நளினம் இருப்பது இயற்கை. அதைத் தவிர்த்து, இயல்பான நடிப்பைக் கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கதாநாயகி கற்பகாவும் நல்ல ஒத்துழைப்பு தருகிறார். ஒவ்வோர் அங்குலத்தையும் மிக கவனத்துடன் செதுக்கிக் கொண்டுள்ளோம். விரைவில் படம் வெளிவரும்.
காதல் கந்தாஸ் (கதாநாயகன்)
இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிறப்பான காரணங்கள் ஏதாவது உண்டா?
சிறப்பான காரணம் கதைதான். கதையும் இயக்குநரும்தான் இப்படத்தின் கதாநாயகர்கள். கதையின் வித்தியாசமான முடிவு என்னை மிகவும் கவர்ந்ததும் ஒரு காரணம்.
உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலிருந்து எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைத்தது?
நேர்மறையான வரவேற்புதான் கிடைத்தது. என் சகோதரிகள் இருவருமே “இது ஒரு நல்ல வாயப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொள்” என்று வாழ்த்தினார்கள். நடன இயக்குநர் பிரபுதேவா அவர்கள் தொலைபேசியில் அழைத்து, வாழ்த்தியது மிகவும் ஊக்கப்படுத்தியது. எனக்கு ஏற்ற கதையை முதல் படத்திலேயே எனக்குக் கொடுத்த சிவகுமார் சாருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். துடிப்பான இயக்குநர். மற்றவரின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்கும் மனம் படைத்தவர்.
கதாநாயகி கற்பகா அமைதியான சுபாவமுடையவர். நாகரிகமான அணுகுமுறையைக் கொண்டவர். யூனிட்டில் அனைவருடன் நட்பு பாராட்டுபவர்.
கற்பகா (கதாநாயகி)
இந்தப் பட வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்ததைப் பற்றிக் கூறுங்கள்.
எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது. முதலில் நிறைய பயமும், தயக்கமும் இருந்தது. என்னால் நடிக்க முடியுமா என்கிற பயம். வழக்கம்போல், எங்களை இழிவாகக் காட்டுவார்களோ என்கிற தயக்கம். இயக்குநர் என்னிடம் முழுக்கதையையும் சொல்லி, புரியவைத்த பிறகுதான் ஒத்துக் கொண்டேன்
படப்பிடிப்பில் மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?
எங்கள் படக்குழுவினர் அனைவருமே மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். பாண்டிச்சேரியில் ஒருவாரம் நடிப்புப் பயிற்சி கொடுத்தார்கள். அதில் கலந்துகொண்ட பெண்கள் என்னிடம் பேசவும், பழகவும் எந்தவித தயக்கமும் இன்றி ஆர்வத்துடன் வந்ததைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்
சொந்த ஊர் ஈரோடு. என்னுடன் பிறந்தது ஒரு தங்கை மட்டும்தான். என் பெற்றோர் எப்போதுமே என்னைப் புறக்கணித்ததில்லை. அவர்களின் ஆதரவு எப்போதுமே எனக்கு உள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். தனிமைப்பட்டு நிற்காமல், எதிர்நீச்சல் போட்டு, அனைவரோடும் இணைந்து பயணம் செய்வது ஒன்றுதான் இந்தச் சமூகம் நம்மை அங்கீகரிக்கச் செய்வதற்கான வழி என்று நினைக்கிறேன்.
4 comments:
//இப்படிப்பட்ட நல்ல முயற்சிகள் வெற்றியடைய வேண்டும். திருநங்கையான கதாநாயகியை ஊடகத்துறையில் வேலை செய்யும் ஆளுமைமிக்க பெண்ணாகச் சித்தரித்துள்ள இயக்குநர் சிவகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படம்வெற்றியடைய நமது வாழ்த்துகள்//
திரு சிவக்குமார்,
மிக மிக நல்ல முயற்சி, வாழ்த்துகள் !
இங்கே பதிவுலகில் திருநங்கையர் பற்றி விழிப்புணர்வு பலருக்கும் உண்டு, லிவிங்க் ஸ்மைல் வித்யா என்கிற திருநங்கைத் தோழியும் பதிவுலகில் கொடிக்கட்டி பறக்கிறார். அவரும் திருநங்கைகளை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தில் தற்பொழுது நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அன்புள்ள கோவி கண்ணன் அவர்களுக்கு உங்கள் அத்தனை பாராட்டுதலுக்கும் நன்றி.மேலும் ஒரு உபரி செய்தி நீங்கள் குறிப்பிட்டுள்ள திருநங்கை லிவிங்ஸ்மைல் வித்யா இந்த திரைப்படத்தில்தான் உதவி இயக்குநராக(வும்) நடிக்கவும் செய்தார்.
உங்கள் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே..நன்றி...முதலில் படம் தடையின்றி எடுத்து முடிக்க வாழ்த்துங்கள்...!
Post a Comment