Saturday, 17 January 2009

மழை

தட்....தட்.....தட்......,
நேற்றிரவு முழுதும்
என் வீட்டு தகரக் கூரையின் மீது
தட்டச்சு......
விடிந்த பிறகு
எழுந்து போய் படித்துப் பார்த்தேன்
ஈரம் என்ற ஒரே வார்த்தை.
காதல்

'எங்கே?' என்றேன்
'எங்கும்!' என்றான் என் பிரகலாத நண்பன்.
'எங்குமென்றால்...? எங்கு...?'
'தூண் உன்னிலும்....துரும்பு என்னிலும்'
'இந்த தூணிலுண்டா...?' என் மார்தட்டி சிரித்தேன்.
'உண்டு!' என்றான்.

ஒரு நாள் ஒரு பார்வை கடாயுதம் தாக்கி
தூண் பிளந்தது.
சிலிர்த்து சிலுப்பி எழுந்தது நரசிம்மம்.
பகலோ இரவோ! ஒளியோ இருளோ....
-ஒரு சூன்ய வேளையில்!
உள்ளோ புறமோ ஓர் நிலையற்ற நிலைப்படியில்.
பூமியிலோ ஆகாயத்திலோயன்றி
-ஒரு மிதப்பில்
அன்பின் ஆயுதத்தால் கிழிந்து கிடந்தேன்.
இனிமையாய் இறந்து கிடந்தேன்.
நன்றி நண்பனே பிரகலாதா!
-இரணியன்.

Thursday, 15 January 2009

அலைகள்


திருப்பத்தூர்

16.10.93

அன்புள்ள பூரணி அக்காவிற்கு! சிவகுமார் எழுதுவது,

வழக்கம்போல் நலம் நலமறிய ஆவல்

என்று தொடங்க முடியாத கடிதமக்கா இது.

அக்கா ஞாபகமிருக்கிறதா? இங்கே திருப்பத்தூரில் பக்கத்து வீட்டில் நீங்கள் குடியிருந்தபோது உங்களுக்கு எனது நண்பன் ஒருவனை அறிமுக படுத்தியிருக்கிறேன். வெங்கி.வெங்கடேசன்.

அந்த நாட்களில் நாம் எதை குறித்துதான் பேசவில்லை!

அலைகளைப்பற்றி பேசியிருக்கிறோம் நினைவிருக்கிறதா? அதன் அழகு.....கொடூரம்...விசித்திரம் குறித்து எவ்வளவு பேசியிருக்கிறோம்! எதிரெதிராய் ஏன்,அடுத்தவருக்குத் தெரியாமல் இரகசியமாகவும் கூட எவ்வளவு விவாதித்திருப்போம்!

அப்படி ஒரு அலை அந்த வெங்கடேசனை வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட்டது அக்கா!

போனவாரம் நான்காம் நாளின் காலை பொழுதில் ஒரு தூறல் நேரத்தில் அந்த வெங்கடேசன் செத்துப்போய்விட்டான்.

'ஐயோ!'....'ஐயோ...!'என்று முகத்திலறைந்து கொண்டு ஓடினோம்.' ஐயோ...சிவா! வெங்கடேசனைப்பாரு!....எதையோ.....பூச்சி மருந்தாட்டமிருக்கு...குடிச்சிட்டான்..ஐயோ எம்புள்ளய பாருப்பா!'-அவனுடைய அம்மா அலற.....மூக்கில் இரத்தக்கோடுகள் இறங்கி சொட்டிக்கோண்டிருக்க...மல்லாக்கக் கிடந்தான் என் வெங்கடேசன்.

'தூக்கு....தூக்கு...!உயிரிருக்கு....உயிரிருக்கு! 'ஒரு கோடி உதடிகள் என் முதுகில் படபடக்க அநிச்சையாய் தூக்கிக்கொண்டு ஓடினோம்.

மூக்கின் இரத்தம் ஒழுகி எங்கள் தோள்பட்டையில் நசநசக்க வெளியே ஓடி வந்தோம். சிகப்பாய்...கருஞ்சிவப்பாய் வெங்கடேசனின் இரத்தம்.

வானத்தை யார் கிழித்துப்போட்டார்களோ தெரியவில்லை. சடசடவென்று இரத்த பொட்டுகளாய் முகத்தில் அறைந்து அறைந்து வீசலாய் இறங்கியது இரத்த மழை. பிரபஞ்சமே இரத்த உருவமாகி உருகி ஒழுகியது. அரை நொடியில் காற்றுவெளிகள் சிவந்து' ஓ 'வென அலறியது.

இரத்தமாய் ஊத்துகிற மழை வலுத்துப்போக ரோடெல்லாம் சொதசொதப்பாய் இரத்தச்சேறு பிசுபிசுப்பாய் பாதங்களை பற்றிக்கொள்ள ஓட முடியாமலாய் உணர்ந்தேன். மழையின் இறைச்சலூடே வெங்கடேசனின் ஏளன சிரிப்பு ஒலிகள் பட்டுத்தெறிக்க...தெறித்த ஒலி துண்டுகள் தூறப்போய் இடிகளாய் எதிரொலித்தது.

நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை. கால இடைவெளிகள் இழைகளாய் நீண்டு நீண்டு எங்களை கட்டி நிறுத்துகிறதாய் உணர்ந்தேன்.

'வெங்கடெசு.....வெங்கடேசு' தெருவின் கதவு எண்கள் கதறி கதறி நாலா திசைகளையும் நிரப்பிக்கொண்டு வந்த்து. சட்டென வெளிச்சம் கருத்துப்போய் பொழுது சாய்ந்த்து. வெளிச்சத்தை சுருட்டி அக்குளில் இடுக்கிக்கொண்டு சிரித்தான் வெங்கடேசு.

மழை இன்னும் வலுத்து காற்று இனுக்குகளின் இடைவெளிகளை நிரப்ப...ஈர அடர்த்திகளில் திசைகள் தீப்பற்றி எரிந்த்து. எல்லா திசைகளுக்கும் ஒரே முகமாகிப்போக,ஜாடை வித்தியாசப்பொராட்டத்தில் ....தினறினோம்.

திசைகளையும் திருடி சுருட்டிக்கொண்டு வெங்கடேசு சிரித்தான்.

வானத்தை கூட வெங்கடேசுதான் திட்டமிட்டு கிழித்திருப்பானோ? இப்படி இரத்தம் கொட்ட செய்தானா? எல்லாமே அவனுக்கு முடிந்திருக்கிறது. திட்டமிட்டு செய்ய முடிந்திருக்கிறது.

உன்னாலே என்னாலோ எதையும் திட்டமாய் செய்துவிட முடியாது பூரணி அக்கா.கற்பனாவாத கல்குதிரை ஏறி திசை குழம்புபவர்கள் நாம். குதிரை ஓட விட்டு அதன் முதுகில் கல்லாய் சமைந்திருப்பவர்கள். இயல்பாய் சூழல் மாற...குதிரை ஓடியதாய் ஏமாறுபவர்கள்.

நிறங்களின் பெயர்களை மாற்றி வெண்டுமானால் பாவனைகாட்டலாமே தவிர நிறங்களையே மாற்றிவிட முடியுமா என்ன?! எந்த பூ நிறம் மாறி பூத்திருக்கிறது நம் தோட்டத்தில். இயல்பில் இழைந்துபோன வாழ்க்கையிலிருந்து விலகி விலகிப்போய் நீயும் நானும்தான் ஏமாந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது அக்கா! நான் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிற வெங்கடேசுதான் ஒரு வேளை சரியோ...?

நேரங்களில் நிறை ஏறிக்கொண்டிருந்தது. வெங்கடேசன் கணத்துப்போய்...வெற்றியடைந்து கொண்டு இருந்தான். நம்பிக்கைக்கண்களுக்கு நிறங்களின் பேதம் குழம்பிப்போய்விட....எல்லா திசைகளின் அடர்வுகளிலும் சிகப்பு தீற்றல்கள்தான் தெரிந்தது. ஒழுகி வழிந்தது. காதோரம் வெங்கடேசு சிரிப்பதாய் தோன்றியது. சிரிப்புக்கூட சிவப்பு பிரவாகமாகி பிரஞைகளுக்காய் நுழைந்து அடர்ந்தது. சிவப்பு அடர்ந்து..அடர்ந்து.....கருத்தது. கருப்பு.....கருப்பு...சிவந்த கருப்பு எதை சொல்கிறது...?

சிவப்பின் ஆழம் கருமையா? அப்படித்தானா? ஞானம் தோற்று ஓட அங்கே சட்டென விழுந்த ஒரு ஓட்டையில் வழுக்கி உள்ளே...உள்ளே...ஆழபயணித்து ....பயத்தில் அலறுகிறது மனசு.

ஆழமாய் வழுக்கி போக போக கருமையின் அடர்வு அதிகமாகி..சூழல் உணரும் முயற்சியில் விழிகள் தோற்றுத்திணற.....கண்களை காணவில்லையாய் உணர்ந்து உயிர் உறைகிறது. இமைகளை எவ்வளவு விரித்து பார்த்தாலும்...அடர்ந்த கருப்பே உள்ளிரங்கி நிறைகிறது. இழைஇழையாய் இணைந்து இறுகி அடர்ந்து 'ஓ' வென ஓலமிடுகிறது. அவ்வளவுதானா? வெங்கடேசா....அவ்வளவுதானா?இருட்டிவிட்டாயா?....இந்த இருட்டில் எந்த ஒரு இழையாய் இணைந்திருக்கிறாய்....?ஒரு துணுக்காய் விண்டு தொங்கினாலும் முனைபற்றி இழுத்துவிட முடியும்....எங்கே....எங்கே...?

நான் வேண்டாமா வெங்கடேசு உனக்கு? உண்மையில் நான் வேண்டாமா? நான் வரைந்து வைத்திருந்த ஒரு படத்தை கேட்டு கேட்டு தொந்தரவு செய்வாயே-அம்மாவின் கணத்த மார்புகளை பிடித்து பசியாறும் ஒரு குழந்தையின் படம்- அது வேண்டாமா? அதை நீ கேட்டபோதெல்லாம் மறுத்து உன்னை விரட்டியிருக்கிறேன். மறந்துவிடு!வெங்கடேசு...பழசையெல்லாம் மறந்துவிடு. இப்போது கண்டிப்பாக தருகிறேன். வா! வந்துவிடு!

எனது வார்த்தைகளின் ஒலிகள் அந்த குருட்டு பிரதேசத்தின் இருட்டு சுவரெங்கும் மோதி மோதி எதிரொலித்துக்கொண்டிருக்க....அந்த கருத்த திட இருட்டின் ஓர் இழை மட்டும் பட்டென அறுபட்டு தொங்கியது. அந்த இழை விடுபட்ட இடைவெளியிலிருந்து எனது ஓவிய அம்மா இறங்கி வந்தாள்...எங்கே என் பிள்ளை...?எங்கே என் பிள்ளை...? என்றபடி.

சடாரென்று கச்சை அவிழ்த்துக்கொண்டு விம்மிய மார்பு காம்பிலிருந்து ஒரே ஒரு துளி பால் அந்த இருட்டு பிரதேச தரைகளில் விழுந்து தெரித்து சிதறியது.

நொடியில் எல்லாம் விலகி பிரபஞ்சம் முழுதும் பால் வெள்ளையாய்....வெளிச்ச கீற்றுகளால் மின்ன.....நான் சுதாரிப்புக்கு வந்த போது நாசித்துவாரம் எங்கும் ஆஸ்பத்திரி வாடை ஆக்ரமித்திருந்தது.

'இறக்கு....இறக்கு....மெல்ல....மெல்ல...'-கூட்டம்

'டாக்டர்....எம்புள்ள...எம்புள்ள...'-வெங்கியின் அம்மா

ஆஸ்பத்திரி! பால் வெள்ளை நிறத்தில் அவர்களும் கட்டில்களும் மனிதர்களும். கருப்பு இருட்டினூடே எப்போது இந்த வெள்ளை வெளிச்ச விளிம்புக்கு வந்தோம்? ஒரு துளி முலைபாலின் சிதறலின் போதா?

'என்னத்த.... குடிச்ச....?....தம்பீ...சொல்லு...என்னத்த...குடிச்ச'-டாக்டர் வெங்கடேசனின் காதோரமாக கத்த'....அலைகளை....அலைகளை குடிச்சேன்'-என்றான் வெங்கடேசன். கல்லாய் சமைந்திருந்த வெங்கடேசன். உதடசையாமல் உருவம் அசையாமல் எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு மேக கூட்டிலிருந்து சத்தமாய் கத்தி சிரித்தான். ஆனால் கட்டிலில் கல்லாய்.

டாக்டர் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார். கல்லை புரட்டி புரட்டி ஈரம் தேடினார்.' என்ன தம்பீ குடிச்ச...இத பார்...என்னை பார்....டாக்டர் பார்.....சொல்லு...உணர்வு தெரியாதா...?நான் கிள்ளறது தெரியுதா...?தம்பீ....தம்பீ....!'ஆளாளுக்கு கல்லை புரட்டினார்கள். உளிகளாய் செதுக்கினார்கள்.

தொடர்ந்து கல்லில் விழும் உளிகள் . ஒன்று மழுங்க...இன்னொன்று...மழுங்கி மழுங்கி...மற்றொன்று...அறையெங்கும் 'ஓ' வென்று கதறி, ஓய்ந்து விழும் உளிகளின் ஒலிகள் எதிரொலித்த்து. கல் சிதையவில்லை. ஒரு துணுக்கு கூட தெரித்து விழவில்லை. ஆனால் உளிகளின் ஓலத்தில் நான் சிதைந்தேன். சிதைந்து சிதறி அறையெங்கும் நிறைந்தேன். மனித பெருமூச்சுகளின் உஷ்ண காற்றில் கலைந்து சிதறி பறந்தேன்.

'உங்களுக்கெல்லாம் தெரியாது. அலைகளை உங்களுக்கு தெரியாது. அலைகள்னா சிவாவுக்கு தெரியும் என் அலை எதுவென்று சிவாவுக்கு தெரியும்'-வெங்கடேசு மேக கூட்டிலிருந்து மீண்டும் குரலெடுத்து கூவினான்.

'ஐயோ....!' என்றபடி தலையை பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தேன்.

அக்கா! நமக்குத்தெரியும். நம் நண்பர்கள் நிறையபேர் அலைகளூடே மறைந்து போயிருக்கிறார்கள்.மீண்டு வந்து கதை சொல்லியிருக்கிறார்கள். தங்களை வாரிச்சுருட்டிக்கொண்டு போன அலைகளின் பலம் சொல்லி,குணம் சொல்லி.....சொக்கியிருக்கிறார்கள்.

தொலைவிலிருந்து எல்லா அலைகளும் ஒரே நிறமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். இறங்கி ஆட்பட்டு மூழ்கியபின் நிறம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வெங்கடேசனை சுருட்டிக்கொண்ட அலையின் நிறம் சிகப்பு. இரத்தம் குடித்த நெருப்பின் சிகப்பு. நெருப்பு அலை பெயர் ராதாவோ சீதாவோ என்று ஞாபகம்.

கானல் அலைகளில் கால் நனைக்க ஓடி-கானாமல் போன உங்கள் கல்லூரி தோழி பாகீரதி!-அவள் கதையை ஒரு வெக்கை நிறைந்த மதிய பொழுதில் எனக்கு சொல்லியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா?

என் நண்பன் செல்வம்கூட அவனை சுருட்டிக்கொண்டு போய் கொன்று போட்டு விட்ட அக்னி அலைகளைப்பற்றி சொல்லியிருக்கிறான். அது சுட்டபோது சுகமாய் செத்து போனதாய் கூறியிருக்கிறான். மறுபடியும் தான் பிழைப்பதெல்லாம் இனிமேல் இல்லையென்றும் இப்படியே செத்துப்போய் உலவுவதே உத்தேசம் எனக்கூறி சிரித்திருக்கிறான்.

இன்னும் நிறைய பேர் நிறைய சொல்லியிருக்கிறார்கள். ஆனால் என் மதில்கள் எனக்கு அலைகளை பற்றி எதுவுமே சொன்னதில்லை.

என் மதில் சுவருக்கு மறுபக்கம் அலைகள் அறைந்ததை உணர்ந்திருக்கிறேன். அலறலாய் ஓடி வந்து பளீரென்று மோதி சிதைந்த அலைகள்...

வெறுமனே ஈரமாய் தொட்டுப்போன அலைகள். சலிக்காமல் ஓடி ஓடி வந்து சதா சுவர் நனைத்த அலைகள். எப்போதும் ஈரம் நிலைத்திருந்ததாகவே எனக்கு நினைவில்லை.என் மதில் சுவறில்தான் எவ்வளவு வெக்கை! 'ஆ' வென வாய் பிளந்து அத்தனை ஈரத்தையும் விழுங்கி….விழுங்கி ஜீரணித்து விடுகிற வெக்கை.

சில வேளைகளில் அலைகளின் தொடர்ந்த தாக்குதலில் மதில் சுவர் ஊறிப்போய் ஈரம் மறுபக்கம் வந்து தலை காட்டியதும் உண்டு. குழம்பிப்போய் மதில்மேல் ஏறி அதன்மீது பூனையாய் நடந்திருக்கிறேன். மறுபக்கம் அலைகள்' ஹோ' வென கை வீசி அழைத்திருக்கின்றன. மாற்றி மாற்றி நிற ஜாலங்கள் காட்டி ஏமாற்றியிருக்கின்றன.குதித்து விட தோன்றினாலும்…ஞானம் குழைத்து கட்டப்பட்ட மதில் சுவர்களில் பசைகளாய் பாதம் ஒட்டிக்கொண்டுவிட….மதில் மேலேயே அசையாமல் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு ஜாக்கிரதையாய் பழைய நிலைக்கே இறங்கி விடுவதுதான் வழக்கமாகிவிட்டிருந்தது.

ஆனால் இப்போது வெங்கடேசனை இந்த நிலைக்கு ஆட்படுத்திய அலைபற்றி எனக்கு தெரியும். நெருப்பு அலை. இழுத்து அணைத்து சாம்பலாக்கி விடுகிற அலை. எப்போதும் இறை தேடுகிற அலை. என்னைப்போல்…..நம்மைப்போல் வெங்கடேசனுக்கு மதில் சுவரும் இல்லை…மண்ணாங்கட்டியும் இல்லை. வெற்று வெளி கரை நனைத்து நனைத்து…அலை விழுங்கியே விட்டது. எல்லாம் முடிந்தே விட்டது.

நேற்று வெங்கடேசனுக்கு 7ம்நாள். அவனது ஆத்ம சாந்திக்காக வேணும் சொல்லித்தானே தீரவேண்டுமென முகவரி தேடி போனேன். தெருவின் கடைசி வீட்டை காட்டினார்கள். மொட்டைமாடியில் வினாடிக்கொருமுறை தாவணி திருத்திக்கொண்டு அவள் ,எதிர் வீட்டு மொட்டை மாடியில்,அடிக்கடி தலையை கோதியபடி வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு ஏதோ சைகை செய்தபடி எவனோ.

வெங்கடேசு எழுதிய

கடைசி கடித்ததில் குறிப்பிட்டிருந்தது இவனைத்தானா?

புதிய கரை!

வெங்கடேசனின் ஆத்மா சாந்தியடையாவிட்டால்தான் என்ன வெறுமனே திரும்பி நடந்தேன்.

Monday, 12 January 2009

என் சினிமாவுக்கு உதவிய சித்தாள்கள்..?

இந்த தொடரை இதோட நிறுத்திக்கலாம்னு உத்தேசித்திருக்கிறேன்...!
காரணம்....,

இருங்க..! அதுக்கு முன்னாடி என் தோழமைகள் அனைவருக்கும்

என் இனிய புத்தாண்டு....,
பொங்கல் நல்வாழ்த்துகள்..!


நான் இப்போ இயக்கிகிட்டிருக்கிற 'பால்' திரைப்படம் பாதியில் அப்படியே நின்னுபோச்சுங்க...! வழக்கமா.... சினிமாவுல நொந்துகொள்கிற Finance பிரச்னைதான்.

100ஆண்டுகால இந்திய.....75வருடகால தமிழ் திரைப்பட வரலாற்றில் திருநங்கைகளை மையப்படுத்திய.....ஏன் ஒரு திருநங்கையையே கதாநாயகியாய் கொண்ட முதல் திரைப்படம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும்...இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் கொண்டாடி...எங்களை புளகாங்கித புல்லரிப்பில் திளைக்க வைத்திருக்க.....

படம் பாதியில் நின்றுபோய்.....என் உதவியாளர்களெல்லாம் மன உளைச்சலில் வருத்தம் தோய்ந்த முக்ககுறிகளுடன் அலுவலகத்தில் என் எதிரே புலம்பியபடி நடமாடிக்கொண்டிருக்க....

நான் இப்படி ஒரு நையாண்டித்தொடரை எழுதிக்கொண்டிருப்பது....கூச்சமாய் உணர்கிறேன். விடியும் என்ற நம்பிக்கையுடன் கொஞ்ச காலம் இதை நிறுத்தி வைப்போம்..!

நிற்க....நாளை போகி..! பழையன கழிதல்..! ஆனால் முரண்பாடாய் ஒன்று தோன்றியது. விளைவு....பரணில் தேடி தூசுதட்டி எடுத்த சில போகிப்பொருள்களை எரிப்பதற்குப்பதில்...நீங்கள் கொறிப்பதற்கு கொடுத்தாலென்ன...?

சிவா.....எதாவது தொடர்ந்து எழுதுங்க...நிறுத்தாதீங்க..! என்று சொன்ன என் தோழர் ஜெயகாந்தனிடம் கொடுத்து....இடுகையிட சொல்லிவிட்டு செல்கிறேன். நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்.....

எதை எதை எடுத்து போடறாரோ...படிச்சுட்டு பின்னூட்டம் அடிச்சு வையுங்க..! வந்து பார்க்கிறேன். மீண்டும் சந்திப்போம்...! வாழ்த்துகள்..!

கூடவே உலகின் எந்த மூலையிலிருந்தாலும்.....பைனான்சியரோ....,தயாரிப்பாளரோ....., கிடைத்து 'பால்' படம் மீண்டும் வளர....வாழ்த்துங்கள்.....
உங்கள் நல்வாழ்த்து பலிக்க கடவ...!


என் சினிமாவுக்கு உதவிய சித்தாள்கள்..?

இந்ததொடரை இதோட நிறுத்திக்கலாம்னு உத்தேசித்திருக்கிறேன்...!

காரணம்....இருங்க..!

அதுக்கு முன்னாடி என் தோழமைகள் அனைவருக்கும்

என் இனிய புத்தாண்டு.....,
பொங்கல் நல்வாழ்த்துகள்..!


நான் இப்போ இயக்கிகிட்டிருக்கிற 'பால்' திரைப்படம் பாதியில் அப்படியே நின்னுபோச்சுங்க..! வழக்கமா....சினிமாவுல நொந்துக்கிற finance பிரச்னைதான்.
100 ஆண்டுகால இந்திய...,75 வருடகால தமிழ் திரைப்பட வரலாற்றில் திருநங்கைகளை மையப்படுத்திய...ஏன் ஒரு திருநங்கையையே கதாநாயகியாய் கொண்ட முதல் திரைப்படம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும்...

இந்தியா முழுதும் உள்ள பத்திரிகைகளும்,மீடியாக்களும் கொண்டாடி...எங்களை புளங்காகித புல்லரிப்பில் திளைக்க வைத்திருக்க...

படம் பாதியில் நின்றுபோய்...என் உதவியாளர்களெல்லாம் மன உளைச்சலில் வருத்தம் தோய்ந்த முக்ககுறிகளுடன் அலுவலகத்தில் என் எதிரே புலம்பியபடி நடமாடிக்கொண்டுருக்க...

நான் இப்படி ஒரு நையாண்டித்தொடரை எழுதிக்கொண்டிருப்பது....கூச்சமாய் உணர்கிறேன். விடியும் என்ற நம்பிக்கையுடன் கொஞ்சகாலம் இதை நிறுத்தி வைப்போம்..!

நிற்க...நாளை போகி..! பழையன கழிதல்..! ஆனால் முரண்பாடாய் ஒன்று தோன்றியது. விளைவு, பரணில் தேடி தூசுதட்டி எடுத்த சில போகிப்பொருள்களை எரிப்பதற்குப்பதில்...நீங்கள் கொறிப்பதற்கு கொடுத்தாலென்ன...?

சிவா...எதாவது தொடர்ந்து எழுதுங்க...நிறுத்தாதீங்க...! என்று சொன்ன என் தோழர் ஜெயகாந்தனிடம் கொடுத்து...இடுகையிட சொல்லிவிட்டு செல்கிறேன். நாலஞ்சு நாள் கழிச்சு வரேன்....

எதை எதை எடுத்து போடறாரோ....படிச்சுட்டு பின்னூட்டம் அடிச்சு வையுங்க..! வந்து பார்க்கிறேன். மீண்டும் சந்திப்போம்..! வாழ்த்துகள்...!

கூடவே உலகின் எந்த மூலையிலிருந்தாலும்...
பைனான்சியரோ, ஆர்வமுள்ள தயாரிப்பாளரோ கிடைத்து 'பால்' படம் மீண்டும் வளர.....வாழ்த்துங்கள்...உங்கள் நல்வாழ்த்துகள் பலிக்க கடவ....!
நிர்வாணக் கேள்விகள்

என் கேள்விகளின் நிர்வாணத்தை
ரசிக்கின்றன
உடை சுமந்த உன் பதில்கள்

எனினும்...
களைந்த பின்னும் உடல்வாடை சுமக்கும்
உடைகளைப்போல்...

தயங்கி தயங்கி...
களைந்த பின்னும் உடைவாடை
சுமக்கும் உன் பதில்கள்

இன்னும்
உன் பதில்களின்
நிஜமான நிர்வாணத்திற்காய்
காத்திருக்கிறது...
நிஜமான நிர்வாணத்துடன்
என் கேள்விகள்.

உன் ஞாபகம்

மழையின் வரவில்
சன்னல் வழி சாரலில்
புலர்ந்த பொழுதின் புது பூவில்
தாவர இளந்தளிரில்
புல் நுனி பனித்துளியில்
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில்
மயங்கும் மஞ்சள் வெயிலில்
குயிலின் கூவலில்
குளிர்ந்த நெருப்பில்
சுட்ட பனியில்
தூர-குழலின் இழையில்
விளக்குச்சுடரின் நடன நளினத்தில்
-என்று எதிலும் எப்போதும்
உன் ஞாபகம்...உன் ஞாபகம்...உன் ஞாபகம்
என்றெல்லாம் பொய் ஏன் சொல்ல வேண்டும்?

உண்மையில்
உன் ஞாபகத்திற்கிடையே
இடறுவதில்லை இவை எதுவும்
எனக்கும் என் கவிதைக்கும்.

சாகசம்

எப்போதுமே
அர்த்தங்களுக்கு அகப்படாமல்
சாகசம் செய்கிறது உன் வார்த்தைகள்
ஆனால்...அர்த்தங்களை சீண்டியபடி.

சரி சொல்!
இந்த கண்ணாமூச்சியாட்டத்தில்
உன்னை தீண்ட வேண்டுமா?
அல்லது தீண்ட முடியாமல் தவிப்பவனாய்
நடிக்க வேண்டுமா நான்..?

Saturday, 10 January 2009

என் சினிமாவுக்கு உதவிய சித்தாள்கள்-02

ந்த தொடரில் எனது அனுபவங்கள் காலவரிசைப்படிதான் அமையவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். முன்பின் கலைத்துப்போட்டு சொல்லும்போதும் இயல்பாகவே சுவாரசியமாகவும் அழகாகவும் ஒரு ஒழுங்கு நேர்த்தியில் அமைந்துவிட வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். முதல் படமே ஒரு பிரபல இயக்குநரிடமென அமைந்துவிட்டபோதும், தொடர்ந்து அங்கிருப்பதால் பெருசா எந்த பலனும் இல்லை என தெரிந்தபோது, புலிக்கு வாலாய் இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருக்கலாம் என்கிற நினைப்பில் புதுமுக இயக்குநர் கழுத்தில் என்னை பொருத்திக்கொண்டேன். நான் போனபோது இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் போகப்போகிறநிலையில் இருப்பதைப்போன்ற தோற்றத்தில் இருந்தார்கள். எனது கையெழுத்து அழகாய் இருந்ததால் டைரக்டரின் ஸ்கிரிப்ட்டை படியெடுக்கிற வேலையின்போது ஆங்காங்கே நான் சேர்த்து எழுதிய வசனங்களாலும், காட்சிகளாலும், ஈர்க்கப்பட்டு அவர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தின் காரணமாய், மொத்த கதையும இறுதியில் என்னுடைய கதையாகவே மாறிப்போனது தனிக்கதை.

அதைவிடுங்கள், நான் சொல்ல வந்த சம்பவம் ....அங்கே எனக்கு நேர்ந்த (இதை படித்துவிட்டு இந்த அனுபவத்திற்காக கூட அடுத்த சில நூறுபேர் உடனே ரயில் ஏறலாம்....வயது 25க்குள் இருப்பது சிறப்பு)

அந்த முதல் துணுக்குறலுக்குப்பிறகுதான் தெரிந்தது, இங்கே இதெல்லாம் அன்னாடங் காட்சி என்பது. ஒருநாள் அறையின் மூலையில் அமர்ந்து தீவிரமாக நான் எழுதிக்கொண்டிருக்க, டைரக்டர் மற்ற உதவிகளுடன் ஏதோ பிரதாபித்துக்கொண்டிருக்கும்போதுதான்..... அவள் உள்ளே நுழைந்தாள்.நடிக்கனுமாம். வாய்ப்பு வேணுமாம்.

டைரக்டரின் ஒரு நேர்த்தியான கண்ணசைவை புரிந்துகொண்டு உதவிகள் எழுந்து வெளியே போக, - ஆரம்பமாகியது டைரக்டருக்கு அவளுடனான இன்டர்வியூ.

நானும் எழுந்து போக எத்தனிக்க, டைரக்டரோ... கண்களால் என்னை கைதுசெய்து நீ பாட்டுக்கு உன் வேலையைப்பார்என்பதுபோல் பாவித்தார். கொஞ்சநேரம் அவர்களின் உரையாடல்களை காதில் வாங்கியும் வாங்காதபடியும் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் பேச்சரவமே அற்றுப்போய் பேரமைதி நிலவ...அதை உணர்ந்தாலும் தலையை தூக்காமல் ஸ்கிரிப்டில் லயித்துப்போய் இருந்தேன். தீடீரென மெல்ல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாவதாய் உணர்ந்தேன். அறைக்குள் ஏதோ பாம்பு நுழைந்ததைப்போல் அந்த.....புஸ்....புஸ்....

துணுக்குற்று தலைநிமிர்ந்து பார்த்தவனுக்கு ....சில்லிட்டுப்போனது ....இல்லை...திடுக்கிட்டு.... இல்லை.... கால்களுக்கிடையே தரைநழுவி.... இல்லை.... சப்தநாடியும்....இல்லை....இந்த கருமமெல்லாம் ஏற்கனவே நான் கதைகளில் படித்த வார்த்தைகள். இது வேறு ஏதோ.....வார்த்தைகளெல்லாம் அந்த உணர்வை வெளிப்படுத்த உதவாது.

என்னுடைய அன்றைய 22வயதுவரை இப்படி எதுவும் எனக்கு முன்பின் நேர்ந்ததில்லை.

சிறுவயதில் ஒரேஒருமுறை வீட்டுமொட்டைமாடியில் காயப்போட்டிருந்த விறகுகளை எடுக்கப்போனபோது பக்கத்துவீட்டு கொல்லைபுறத்தில் இருந்து 'சிவா...சிவா...'என எனக்கு பரிச்சய குரல் ஒன்று கூப்பிட அவளிடமிருந்து அடுத்த வார்த்தை வருவதற்குள்....'இதோ வர்ரேன்கா...!'என்று அவசர அவசரமாய் நான் ஓடிப்போய் எட்டிப்பார்க்க (தன் வாயாலேயே தனக்கு சூனியம் வைத்துக்கொள்வதென்பது இதுதான்....! )

பேசாமல் இருந்திருந்தால் நான்பாட்டுக்கு விறகை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிப்போய் இருப்பேன். அவளே 'சிவா...சிவா'..ன்னு கூப்பிட்டு சூனியம் வைச்சிகிட்டா நான் என்ன செய்ய ..?

நான் ஓடிப்போய் எட்டிப்பார்த்தபோது, முகத்தில் சோப்புடன் கண்களை திறக்காமலே ....ஆனால் எல்லாம் திறந்த நிலையில், அந்த திகம்பரி நான் குளிச்சிக்கிட்டிருக்கேன் சிவா..! அந்தப்பக்கம் போ..என்று கதைசொல்லும்போது மிக இயல்பாய் ஒரு காட்சியை சொல்வதுபோல்...

நாசமாப்போச்சு....கடவுளே...கடவுளேன்னு ....(எதையாவது பார்த்து பயந்தா ஜூரம் வரும்ணுவாங்களே ...அந்த விநாடியே எனக்கு அடிக்க ஆரம்பிச்சது)

விறகுக்கட்டை மறந்துவிட்டு ....கால்கள் பின்ன...கந்தர்சஷ்டி கவசம் சொன்னபடி, இந்த 'கட்டை' அனிச்சையாய் கீழே இறங்கி ....

இதை தவிர வேறு அனுபவம் இல்லாத நிலையில்,...அதுவும் நின்று , அவதானித்து ரசிக்கிற மனதோ .... வயதோ...ஏன் recollection பண்ணிப்பார்க்ககூட நாகரீகம் தடுக்கிற உறவு.. அவளது உறவு... என்பதால்....

அதைவிட இந்தகாட்சி என்னை பயங்கரமாய் தாக்க .... 'அய்....ய்....யோ....ஓ ...!' என நீளமாய் அலறிவிட்டேன் நான்.

ஜாக்கெட்டில் எல்லா ஊக்குகளும் கழண்டுகிடக்க ....வெற்றுமார்பில் (திரண்டிருக்கவில்லை..! இது அதன்பிறகு டைரக்டரின் கமென்ட்...!) லயிப்புடன் கை ஓட்டிக்கொண்டிருந்த இயக்குநர் திடுக்கிட்டு என்னை திரும்பி பார்க்க

மந்திரிக்கவந்த பூசாரிமுன் தன்னை முழுதும் ஒப்புக்கொடுத்த ஒரு 'நல்ல' பேய்போல அவள் விழி உருட்டிக்கொண்டிருக்க.... ,

எனக்கு கழுத்தில் இருந்து கால் கட்டைவிரல் வரை மறத்துப்போன உணர்வில் அலறிக்கொண்டு எழுந்து வெளியே ஓடி ....கீழே விழுந்து....

உதவிகள்...என்ன சார் ஆச்சு...என்ன சார் ஆச்சு!என ஆளாளுக்கு உசுப்ப

நான் கெக்கபிக்கன்னு...நாக்கு குழறி ....

........தொடரும்..,

Monday, 5 January 2009

ஆனால்...நிகழ்ச்சியின் இறுதியில் சுபவீ அண்ணன் சொன்னதுதான் எனக்கும் உடன்பாடு.(இதுதான் தலைப்பு)

எனினும்,

கடந்த 4.01.2008 அன்று விஜய் டி.வியில் ' நீயா? நானா ? 'வில் சோதிடம் சம்மந்தமாக நிகழ்ந்த விவாதத்தின் அடிப்படையில் நானும் சில கருத்துகளை முன் வைத்தே தீர வேண்டும். இயற்கை உபாதையைப்போல் தவிர்க்க முடியாதது இது.

பொதுவாகவே டி.விக்களில் விவாத நிகழ்ச்சிகளின்போது சேனலை மாற்றிவிடுவேன் நான். யாராவது தவறாக வாதம் செய்து கொண்டிருக்கும்போது.. வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு கையாலாகத்தனத்தின் உக்கிரத்தில் நரம்புகள் முறுக்கேறி...ரத்தம் தலைக்கேறி...ஆனால் குறுக்கிட முடியாத அவஸ்தை...அது ரொம்ப கொடுமை. அதைவிட சேனல் மாறிப்போய் குத்தாட்டம்போடும் எவளது தொப்புளிலாவது விழுந்து கிடப்பது மேல்.

அது என்னவோ இந்த மாதிரி ஒரு விஷயத்தை நிறுவும் முனையில் அமர்பவர்களில் அரைவேக்காடுகளே அதிகம்.

பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் மறுப்பது சுலபம் .எள்ளி நகையாடி நையாண்டி செய்து மறுத்துப்பேசுவதற்கு பெரிய அளவில் விஷய ஞானமே தேவையில்லை.ஆனால் ஒன்றை நிறுவ முனையும் போது 'நுனிப்புல்'ஞானமெல்லாம் போதாது. காரணகாரியம்-சாட்சிகளுடன் பிரம்ம்பிரயத்தனம் தேவைப்படும். அன்று அவ்வளவு தயாராக யாரும் வராதது சங்கடமாக இருந்தது.

சோதிடத்தில் ஆர்வமுள்ள நான் பொதுமக்கள் அதை நுகர்வது குறித்து எதிர்மறை கருத்து உடையவன்தான். சோதிடத்தில் அன்று எழுந்த ...எழாத ....வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு இடங்களில் எழும் சில சந்தேக கேள்விகளுக்கு கொஞ்சம் விளக்கங்கள் என்னிடம் உண்டு.

1.ஒரு மருத்துவர் கேள்வி எழுப்பினார்

ஒரு குழந்தை முழுமையாய் பிறந்து வருவதற்கு சில நிமிட கணக்கில் நேரமாகும். அதிகபட்சம் 20 நிமிட பிரசவ நேரத்தில் எந்த நேரத்தை பிரசவ நேரமாக குறிப்பது? தலை வெளியே வந்ததையா? பாதிஉடல் வெளியே வந்த்தையா? இல்லை முழுதும் வெளியே வந்தபிறகா? தொப்புள்கொடி அறுத்தபிறகா? இல்லை..எல்லாம் முடிந்து ஆசுவாசமாகி கைகால்களை கழுவிக்கொண்டு ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வந்து குழந்தை பிறந்த நேரம் என்று உத்தேசமாக ஒரு நேரத்தை பதிவு செய்கிறோமே....அதையா?

அதெல்லாம்..ஒரு குழப்பமுமில்லை. ஒரு குழந்தைக்கு தாயின்வயிற்றுக்குள் சுவாசமில்லை. மேற்சொன்ன எந்த நிலைகளிலுமில்லை. தாயின் தொடர்பாய் ஒட்டிக்கிடக்கும் தொப்புள்கொடி அறுபட்டவுடன் சுவாசக்காற்றுக்காய் தவித்து இயற்கையிலேயே முதன்முதலாய் தனது மூக்கின் வழியே இந்த பிரபஞ்சக்காற்றை உள்ளே இழுக்கிறது குழந்தை. அந்த முதல் சுவாசத்தின்போதுதான் பிரபஞ்சவெளியில் இருக்கும் கிரகங்களின் கதிர்கள் அவைகளின் நிலை-தன்மையோடு...அதன் உடலுக்குச்சென்று பதிவாகிறது .இறந்தே பிறக்கும் குழந்தைக்கு என்ன ஜாதகம் என்ற கேள்விக்கும் இதிலேயே பதில் இருக்கிறது.

முதல் சுவாசக்காற்று உள்ளே நுழையும்போது நுரையீரல்-சுவாசப்பாதைகள் பரபரவென்று பிரிந்து வழிவிடும்போது ஏற்படும் ஒருவித எரிச்சலில் அல்லது வலியில்தான் குழந்தை வீறிட்டு அழுகிறது. எனவே குழந்தையின் முதல் அழுகுரல்தான் விதிநேரம். ஆக மனிதன் அவனதுவிதிபதிவாகும்போதே அழுகையுடன்தான் அதை பதிவுசெய்து கொள்கிறான்.

2. இரண்டாமாவது விஷயத்திற்கு போகும்முன் முதல் விஷயம் சார்ந்து ஒன்று சொல்லிவிடுகிறேன். அன்று நீயா நானாவில் சோதிடத்தை மறுக்கும் திசையில் அமர்ந்திருந்த ஒரு டாக்டர்.. அவருக்கு-அவரை சார்ந்தவர்களுக்கு சோதிடம் பொய்த்துப்போன கதைகளை சொல்லிக்கொண்டுவந்தார்.

அவரே ஒரு இடத்தில் ஒரு கேள்வியையும் எழுப்பினார். நாங்கள் பிரசவம் பார்த்தபிறகு ஆசுவாசமாக (டீயெல்லாம் சாப்பிட்டுவந்து..) பிரசவ டென்சன்எல்லாம் குறைந்த பிறகுதான் ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தையே எழுதுவோம். அந்த குத்துமதிப்பு நேரத்தைவைத்துக்கொண்டுதான் இவர்கள் சோதிடப்பலனையெல்லாம் சொல்கிறார்கள்.

அடப்பாவி! அப்போ சோதிடம் பொய்த்துபோவதற்கு நாங்களல்ல நீங்கள்தான் முதல் காரணம். சோதிடத்தின் முதல் கயமையே உங்ககிட்ட இருந்துதான் ஆரம்பிக்குதான்னு அவரை மடக்கி எதிர்கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது. அப்புறம் எப்படிய்யா நாங்க சொல்ற பலன் சரியாவரும். அதையே காரணம் காட்டி எப்படிய்யா சோதிடம் பொய்னு வாதாட வேற வந்தேன்னு கேக்க...எதிரணியில யாருமில்லை.

அதுமட்டுமில்லாம சோதிடம் உண்மைன்னு நிறுவ வந்த கூட்டத்துல ஏகப்பட்ட கூத்து நடந்தது. சரி சில சோதிடர்கள் செய்யும் தவறு, பலனும் மாறிப்போகிறதுன்னு நீங்களே ஒத்துக்கறீங்களே எதை எதை தவிர்க்கனும்னு நீங்களே சொல்லுங்கன்னு மைக்கை அவருகிட்டே கொடுத்தபோது, கிளி ஜோசியம் தப்புங்க-சரி மைக்கை அவருகிட்டே கொடுங்க குறி சொல்றது சரியா வராதுங்க-சரி மைக்கை...கைரேகை கோளாறுங்க என்கிற ரீதியில் ஆளாளுக்கு மறுத்து அவர்கள் தலையில் அவர்களே மண்ணைப்போட்டுக்கொள்ள ஒரு கட்டத்தில் சுபவீ அழகாக சொன்னார்.

ஆக...மொத்தம் அவங்க அத்தன பேரும் அத்தன ஜோதிட முறையையும் அவங்களே மறுத்துட்டாங்க...என்ன..! அவங்க பகுதிபகுதியா மறுத்தத நாங்க மொத்தமா மறுக்கிறோம் அவ்வளவுதான்! என்றார்..

எதிர்புறம் ஒரு டாக்டர் உக்காந்துதான் ஒரேடியான எதிர்வாதம் பண்ணிகிட்டிருந்தார். இந்த நிகழ்வு ஒரு மருத்துவத்தை குறித்ததாக இருந்து கேலரியில் சித்தா, யுனானி, அக்குபங்சர், ஆயுர்வேதம், ஹோமியோபதி, அலோபதின்னு டாக்டர்கள் அமர்ந்திருந்து மைக்கை கைமாத்திக்கொண்டே போயிருந்தால் ஆயுர்வேதம் அலோபதியை மறுக்க, அலோபதி சித்தாவை மறுக்க, சித்தா அக்குபங்சரை மறுக்கன்னு...இதே விஷயம்தான் நடந்திருக்கும்.

அதுக்காக பகுதிபகுதியா எல்லாமருத்துவமும் மறுக்கப்பட்டதால நாம மொத்தமா வைத்தியத்தையே மறுத்துவிடமுடியுமான்னு கொஞ்சம் சாமர்த்தியமா .....(வேற வழி?) ஒப்பேத்தியிருக்கலாம். அதையும் யாரும் செய்யல.

இதுக்கிடையில் சூரியன் ஒரு கோளே இல்ல...சந்திரன் ஒரு துணைக்கோள்தான். ராகு கேதுன்னா என்ன? இப்படி சில கேள்விகளுக்கு யாரும் சரியான பதிலே சொல்லலை.

ராகு கேதுங்கறது கிரகங்களே இல்ல..அது ஒரு வெற்றிடம்..பூஜ்யம் .(நிழல் கிரகம்) ஆனா ஒண்ணுமே இல்லன்ற ஒண்ணு எப்படி effect பண்ணும். அப்படின்னா ஆதியிலே ராகு கேதுகளே இல்லாமதான இந்த சோதிடம் இருந்தது....இடையில் வந்த அதுதானே இப்ப ரொம்ப பிரச்னையா இருக்கு...ராகுகாலம் அது இதுன்னு...!- இப்படி சில கேள்விகள்.

ஒண்ணுமே இல்லாத ராகு கேது...எண் வரிசையில் ஒண்ணுமே இல்லாத0பூஜ்யம் மாதிரி. யாரையாவது எண்களை எழுதச்சொன்னா 0த்திலிருந்து ஆரம்பிக்கிறது இல்ல..1,2,3...ன்னுதான் ஆரம்பிக்கிறோம். எண்வரிசையில் அத யோசிக்கிறதே இல்ல. அது ஒரு எண்ணுமில்லை. ஆனா அந்த 0வோட effectஎண்வரிசையில் எவ்வளவு பெரிய விஷயமோ அப்படித்தான் ராகு கேதுவும். அதுமட்டுமில்ல பூஜ்யம் கூட இடையில் கண்டுபிடிக்கப்பட்டதுதான். பிரச்சனை அதுவல்ல.

வானமண்டலத்தில் இருக்கிற சூரியன் நிலவு போன்றவற்றால் பூமியில் சில விளைவுகள் ஏற்படுகிறதா இல்லையா? பௌர்ணமி பொழுதில் அலையின் சீற்றமும், அமாவாசை,பௌர்ணமிபொழுதுகளில் மனநிலை குன்றியவர்களிடம் அதிகபட்ச பாதிப்பும் நாம் கண்கூடாக பார்ப்பதுதானே. அதைத்தான் சோதிடத்தில் மதிகாரகன் என்று நிலவை சொல்கிறார்கள். ஏன் நிலவுக்கு மதி என்று பெயரே உண்டு. அதுபோல எல்லா கிரகங்களின் தாக்கமும் பூமியில் உள்ள எல்லா பொருள்களிடத்திலும் உயிர்களிடத்திலும் சில பாதிப்புகளை உண்டு பண்ணவே செய்கிறது.

அறிவியல் இதுவரை நிரூபிக்காத விஷயங்கள் அணைத்துமே நம்ப தகுந்ததில்லை என்று கங்கணம் கட்டிக்கொள்ளமுடியாது. இயற்கையின் அதிசயங்களில் 1% கூட அறிவியல் இதுவரை எட்டியிருக்காது. அப்படிபார்த்தால் சென்ற நூற்றாண்டில் ஒலி அலைகள் பொய்,ஒளி அலைகள் பொய், இன்னும் கொஞ்சம் தள்ளிப்போனால் மின்சாரம் பொய், நிறுவப்படாத வரை எல்லாம் பொய்தான். அறிவியல் தொடாத...தொட விரும்பாத.. இயலாத விஷயங்களை புறக்கணித்துவிடமுடியாது...

இப்படி சோதிடம் சார்ந்த விஷயங்கள் நிறைய எழுதிட்டே போகலாம். அதை மறுப்பவர்கள் அனைவரும், அதைத்தான் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். சோதிடம் சொன்ன 7 கிரகங்கள்தான் அதனதன் பெயரிலேயே ஞாயிறு...திங்கள்,செவ்வாய்ன்னு கிழமைகளாய் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தொகுப்புதான் அதாவது சூரியன் வான்வெளியில் (சோதிடத்தில் 12 கட்டங்கள்) 12 பகுதியாக நகர்வதைத்தான் 12மாதங்களாக அதன் தொகுப்பு வருடங்களாக...யுகங்களாக...so விருப்போ மறுப்போ...அந்த சூழலில்தான் அனைவரும் இருக்கிறோம்.

சரி..இதையெல்லாம் சொன்னாலும்.. எனக்கு, சோதிடம் பார்த்து யாரும் வாழ்க்கை நடத்துவதில் உடன்பாடில்லை.

ஒரு முழுமைபெறாத...யாரும் முற்றிலும் அறிய முடியாத கலையை நம்பி வாழ்க்கையை நடத்தமுடியாது. அதிலும் சோதிடர் என்ற பெயரில் ஏகப்பட்ட புல்லுருவிகள் வேறு.

சோதிடத்தை பார்த்து எதையும் மாற்றிக்கொள்ளவோ திருத்திக்கொள்ளவோ தப்பித்துக்கொள்ளவோ முடியவே முடியாது. பரிகாரமென்பதெல்லாம் சுத்த பேத்தல்.

அதுவும் மாறிவரும் உலகில் கிரகங்களின் கதிர் வீச்சுகளே இங்கிருக்கும் செயற்கை மின்காந்த அலைகளால் ஏகப்பட்ட பாதிப்படைந்து வீரியம் மாறித்தான் போயிருக்கும். நூறு இருநூறு வருடங்களுக்கு முன் சொன்ன பலன் இப்போது ஏகப்பட்ட மாற்றத்துக்குள்ளாகியிருக்கும். ஆனால் நாம் இன்னும் பழம்பஞ்சாங்கமாகத்தான் பலன் சொல்லிக்கொண்டிருப்போம்.

முன்பு கிராமத்தில் ஓட்டு வீட்டிற்குள் பிறந்து விழுந்து முதல் மூச்சை உள்வாங்கிய குழந்தைக்கும் நகரத்தில் ஏகப்பட்ட மின்சார பயன்பாடு...கதிர்வீச்சுகளும் நிறைந்திருக்கும் மருத்துவமனையில் பிறந்து மூச்சை உள்ளிழுக்கும் குழந்தைக்கும் வித்தியாசத்தை யோசித்துப்பாருங்கள்.

கடவுள் பெயரில் தோன்றிய மத்ததின்பெயரால் பல இழிவுகள் தோன்றி... நாசமா போனப்போ எந்த நிபந்தனையுமில்லாம கடவுளையே அடியோடு மறுத்து நாமெல்லாம் உய்ய வழிசொன்ன பெரியார் மாதிரி

இதுல இத மட்டும் எடுத்துக்குவோம் அதுல அத மட்டும் எடுத்துக்குவோம்னு..குழப்பாம எந்த நிபந்தனையுமில்லாம ஒட்டு மொத்தமா சோதிடத்த மறுத்துட்டு வேலையப்பாருங்க...

நான் மேல்சொன்ன விஷயங்கள் ஒரு முழு இலையை பந்திக்கு விரித்து அதில் ஒரு ஓரமாய் உண்ண ஒரு கை சோறு வைத்தமாதிரி சமாளிப்புதான். இலை முழுக்க நரகலை பரிமாறி அதை உண்ணச்சொல்ல..நீங்களும் இங்கே நான் பரிமாறியிருக்கும் ஒரு கைப்பிடிச்சோறுக்காக நரகல் நிறைந்திருக்கும் இந்த இலையில் உட்கார்ந்து சாப்பிட துணிந்துவிடாதீர்கள்...போய் வேலையை பாருங்க...!

நன்றி; செப்டம்பர்2008, கருஞ்சட்டைத்தமிழர்

இதழில் வெளியான செய்தி

சொல்லாக் கதையை சொல்லத் துணிந்தோம் - திருநங்கையர் பற்றி ஒரு திரைப்படம்

இரா.உமா

இந்தச்சமூகம் அவர்களை விலக்கிவைத்து வேடிக்கைப் பொருளாக்கி விட்டது. தங்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இச்சமூகத்திலிருந்து அவர்களும் ஏனோ விலகியே இருக்க வேண்டியதாயிற்று. இயற்கை இழைத்த குற்றத்திற்கு இவர்களுக்கு ஆயுள் தண்டனை. மரண வேதனையை விடக் கொடுமையானது எது தெரியுமா? தான் வாழுகின்ற சமூகத்தின் உதாசீனமும், புறக்கணிப்பும்தான். அப்படிச் சமூகத்தின் உதாசீனத்திற்கும், புறக்கணிப்புக்கும் ஆளான அவர்கள் கொடுஞ்செயல்கள் புரிந்தவர்களல்லர்; கருவில் உண்டான மரபணு மாற்றத்தால் உருவில் மாறியவர்கள். அவர்கள்தான் திருநங்கைகள்.


ஆணும், பெண்ணும் இணைந்த உருவமான லிங்கத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் இச்சமூகம் இவர்களிடம் மட்டும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் நியாமில்லை. நியாயங்களும், தீர்ப்புகளும் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டுதான் வந்துள்ளன. அதே சமயத்தில் எந்த ஒன்றும் தானாகவே மாறிவிடவில்லை. மாறியும் விடாது. மாற்றுவதற்கான முயற்சிகளை யாராவது சிலர் முன்னெடுக்கும் போதுதான் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அப்படித்தான் திருநங்கைகளைப் பற்றிய சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தை மாற்ற, அரசாங்கம் உட்பட ஆங்காங்கே பலர் பலவிதங்களிலும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் சிவகுமார், சக்தி வாய்ந்த காட்சி ஊடகமான திரைப்படத்தை மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறார். திரைப்படங்களில், கேலிக்குரியவர்களாகவும், பாலியல் தொழிலாளிகளாகவும்தான் இதுவரை திருநங்கைகள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மிகச் சில படங்கள் கொஞ்சம் விதிவிலக்காக இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும் கூட திருநங்கைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், உளவியல் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசவில்லை.

இயக்குநர் சிவகுமாரின் முதல் படமே அதைப் பற்றித்தான் பேசுகிறது. பால் (இனம்) ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் படமென்பதாலோ, என்னவோ படத்தின் பெயரே பால்”. இன்பமானாலும், துன்பமானாலும் அதை அனுபவித்தவர்களால்தானே அந்த உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்த முடியும். அதனால்தான் திருநங்கைகளின் வலியைவெளிப்படுத்த ஒரு திருநங்கையையே இப்படத்தின் கதாநாயகியாக்கி இருக்கிறார் இயக்குநர் சிவகுமார்.

கதாநாயகி ஐஸ்வர்யா திரைப்படத்திற்காக கற்பகாஆகியிருக்கிறார். தோற்றத்தை வைத்து திருநங்கை என்று சொல்லிவிட முடியாதபடி இருக்கும் அழகான பெண். அடுத்து பாராட்டுகளோடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர் இப்படத்தின் கதாநாயகன் காதல்கந்தாஸ். காரணம், நடன இயக்குநரான இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது.

ஊடகத்துறையில் வேலைசெய்யும் நாயகி, தான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். வேலை தேடிக் கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும், அவன் நண்பர்களுக்கும், தான் இருக்கும் ஊடகத்துறையில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார். அங்கு மொட்டுவிடுகிறது காதல். இருவழிக் காதலாக இருந்தும் தன் காதலை வெளிப்படுத்தத் தயங்கும் கதாநாயகி, தன் காதலை ஒரு தலைக்காதலாக்கி, தன் காதலுக்கு முடிவுரை எழுதிவிடுகிறார். இந்நிலையில் கதாநாயகனின் காதல் என்னவாயிற்று என்பதுதான் படத்தின் உச்சகட்டம். படத்தின் இன்னொரு கதாநாயகியாக புகழ்பெற்ற நடிகை ஒருவர் நடிப்பார் எனத் தெரிகிறது.

நகைச்சுவைக்கு மயில்சாமியும், கருணாசும், முக்கியமான வேடங்களில் ரேவதி, கலைராணி, ஜி.எம். குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தளங்களாக சென்னை மற்றும் தேனி மாவட்டப் பகுதிகளையே தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்தார் இயக்குநர். ஒளிப்பதிவு ஆர்.மகேந்திரன், இசை பிரியதர்சன், உதவி இயக்குநர்கள் சேரன், லிவிங்ஸ்மைல் வித்யா, பாடல்கள் விஜயசாகர், நந்தலாலா, ஆண்டாள் பிரியதர்ஷிணி, படத்தொகுப்பு லெனின்.

இப்படிப்பட்ட நல்ல முயற்சிகள் வெற்றியடைய வேண்டும். திருநங்கையான கதாநாயகியை ஊடகத்துறையில் வேலை செய்யும் ஆளுமைமிக்க பெண்ணாகச் சித்தரித்துள்ள இயக்குநர் சிவகுமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படம்வெற்றியடைய நமது வாழ்த்துகள்.

இயக்குனர் சிவகுமார்:
படத்தின் கருஎன்ன?

இது திருநங்கைகளைப் பற்றிய முழு நீளத் திரைப்படம். மற்ற படங்களில் இருப்பது போன்ற, குத்துப் பாடல்கள், நகைச்சுவை, சென்டிமென்ட், சண்டைக் காட்சிகள் அனைத்தும் இதிலும் உண்டு. முதலில் திருநங்கைகளை அவர்களது குடும்பத்தினர் அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கருவாக அமைந்துள்ளது.

முதல்படமே திருநங்கைகளைப் பற்றி எடுப்பதற்கு என்ன காரணம்?

ஒரு சமயம் கோயிலுக்குள் சாமி கும்பிடச் சென்ற திருநங்கை ஒருவரை, அங்குள்ள பெரியவர்கள் வெளியில் பிடித்துத் தள்ளியதைப் பார்த்தேன். மிகவும் வேதனையாக இருந்தது. அவர்களைப் பற்றி பதிவு செய்ய விரும்பினேன். எனக்குத் தெரிந்தது சினிமா. அதையே அதற்கான வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

நீங்கள் பார்த்த நிகழ்வு உங்களைப் பாதித்தது சரி. உங்கள் குழுவினர் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?

திருநங்கைகளைப் பற்றி நிறைய தெரிந்துகொண்ட பிறகுதான் படம் பண்ணும் முடிவுக்கு வந்தேன். நான் படித்தும், நேரிலும் தெரிந்து கொண்டவற்றை என் குழுவினருக்குப் பொறுமையாக விளக்கிக் சொல்லிப் புரிய வைத்தேன். இப்பொழுது என்னைவிட எனது குழுவினர் பல மடங்கு உணர்வோடும், உற்சாகத்தோடும் பணியாற்றுகின்றனர். அதேபோல் என்னுடைய சிறப்பான பாராட்டுக்குரிய நபர் கதாநாயகன் காதல்கந்தாஸ். தனது யதார்த்தமான நடிப்பில், எங்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

திருநங்கையை - திரையில் ஒரு சராசரி பெண்ணாகக் காட்டுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?

ஆம். இருக்கிறது. மிகுதியான பெண்தன்மை காரணமாக அவர்களுடைய உடல்மொழியில் அதிகப்படியான நளினம் இருப்பது இயற்கை. அதைத் தவிர்த்து, இயல்பான நடிப்பைக் கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கதாநாயகி கற்பகாவும் நல்ல ஒத்துழைப்பு தருகிறார். ஒவ்வோர் அங்குலத்தையும் மிக கவனத்துடன் செதுக்கிக் கொண்டுள்ளோம். விரைவில் படம் வெளிவரும்.

காதல் கந்தாஸ் (கதாநாயகன்)

இந்தப் படத்தில் நடிப்பதற்கு சிறப்பான காரணங்கள் ஏதாவது உண்டா?

சிறப்பான காரணம் கதைதான். கதையும் இயக்குநரும்தான் இப்படத்தின் கதாநாயகர்கள். கதையின் வித்தியாசமான முடிவு என்னை மிகவும் கவர்ந்ததும் ஒரு காரணம்.

உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியிலிருந்து எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைத்தது?

நேர்மறையான வரவேற்புதான் கிடைத்தது. என் சகோதரிகள் இருவருமே இது ஒரு நல்ல வாயப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொள்என்று வாழ்த்தினார்கள். நடன இயக்குநர் பிரபுதேவா அவர்கள் தொலைபேசியில் அழைத்து, வாழ்த்தியது மிகவும் ஊக்கப்படுத்தியது. எனக்கு ஏற்ற கதையை முதல் படத்திலேயே எனக்குக் கொடுத்த சிவகுமார் சாருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். துடிப்பான இயக்குநர். மற்றவரின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்கும் மனம் படைத்தவர்.
கதாநாயகி கற்பகா அமைதியான சுபாவமுடையவர். நாகரிகமான அணுகுமுறையைக் கொண்டவர். யூனிட்டில் அனைவருடன் நட்பு பாராட்டுபவர்.

கற்பகா (கதாநாயகி)

இந்தப் பட வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்ததைப் பற்றிக் கூறுங்கள்.


எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது. முதலில் நிறைய பயமும், தயக்கமும் இருந்தது. என்னால் நடிக்க முடியுமா என்கிற பயம். வழக்கம்போல், எங்களை இழிவாகக் காட்டுவார்களோ என்கிற தயக்கம். இயக்குநர் என்னிடம் முழுக்கதையையும் சொல்லி, புரியவைத்த பிறகுதான் ஒத்துக் கொண்டேன்

படப்பிடிப்பில் மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

எங்கள் படக்குழுவினர் அனைவருமே மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். பாண்டிச்சேரியில் ஒருவாரம் நடிப்புப் பயிற்சி கொடுத்தார்கள். அதில் கலந்துகொண்ட பெண்கள் என்னிடம் பேசவும், பழகவும் எந்தவித தயக்கமும் இன்றி ஆர்வத்துடன் வந்ததைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்

சொந்த ஊர் ஈரோடு. என்னுடன் பிறந்தது ஒரு தங்கை மட்டும்தான். என் பெற்றோர் எப்போதுமே என்னைப் புறக்கணித்ததில்லை. அவர்களின் ஆதரவு எப்போதுமே எனக்கு உள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். தனிமைப்பட்டு நிற்காமல், எதிர்நீச்சல் போட்டு, அனைவரோடும் இணைந்து பயணம் செய்வது ஒன்றுதான் இந்தச் சமூகம் நம்மை அங்கீகரிக்கச் செய்வதற்கான வழி என்று நினைக்கிறேன்.

டி.சிவகுமார் கவிதைகள்

வாய்மை

குறி விறைத்து
புணர்ச்சிக்காய் அலையும்
பொய்மை.
புணர்ச்சியின் விளைவாய்
பிறந்து விழும்...தொடர்ச்சியாய்
மேலும் மேலும் பொய்கள்.
வம்சம் வளர்க்கும்
பொய்மைக்கெதிராய்
மலட்டுத்தனத்துடன்
மௌனமாய் வாய்மை.
சரிதான்
வாரிசொன்றெதற்கு
சாஸ்வத வாய்மைக்கு.

காமம்

பிறந்துவிழும் முனைப்பில்
யோனி தேடும்
கர்ப்பத்துள் முற்றிய காமம்
பிரசவ வேதனையின்
உக்கிரம் தாங்காமல்
உருக்குலையும் உடல்.
பிறந்து விழுந்த பிறகும்
அறுபடாமல்...
தொடர்பாய் தொங்கி கிடக்கும்
தொப்புள் கொடி
வழக்கம் போல்
நிறைத்துக்கொள்ளும்
கர்பப்பை தன்னுள்
அடுத்த கருவை.

நிர்வாண சங்கு

சாத்தியப்பட்ட இலக்குகளில்
சுவாரசியமற்று
அசாத்திய இலக்குகளில்
ஆர்வமற்று
வாழ்ந்து கழிகிறது வாழ்க்கை.
நிஜத்தை புறக்கணித்து
வெறும் நம்பிக்கையை மட்டும்
எப்படி நம்பும் மனம்.
நிர்வாணம் சுகமாய் பட
ஆடைகளை பற்றிய அக்கறை
அற்று விட்டது.
சும்மா கிடக்கிறேன்
யாராவது
ஊதிக் கெடுக்காமலிருந்தால் சரி.

ஹைக்கூ..?

அடுப்பிலிட்டு எப்படி எரிப்பேன்
தட்டிய வரட்டியில்
இறந்துபோன அம்மாவின் விரல்கள்.
...........................................................
மொட்டை மாடியென
எப்படி சொல்வது..?
நீ தான் தினம் பூக்கிறாயே..!
...........................................................
சாக்கடை தேங்கி
நாற்றம்
துவாரம் அடைத்துக்கொண்டு
ஒரு பூ..!
............................................................
பாலருந்தும் குழந்தை
எதிரே சதை திண்ணும் கண்கள்
பசிகள்.
....................................................
பிரதிபலிக்க ஏதுமில்லாத
கணம் தேடி
கண்ணாடி.
......................................................